தேசிய தினத்தை முன்னிட்டு நடந்த ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்ற கவச வாகனம் ஒன்று போக்குவரத்து சமிக்ஞை மீது மோதியது.
தேசிய தின அணிவகுப்பு தேசியக் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவச வாகனங்களில் ஒன்று சனிக்கிழமை (ஜூலை 5) அந்த விபத்தில் சிக்கியது. நாடாளுமன்றக் கட்டடம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்கு வெளியே வலது புறம் திரும்பும்போது அந்தக் கவச வாகனம் அருகிலிருக்கும் போக்குவரத்து சமிக்ஞை மீது மோதியது.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து சமிக்ஞை சேதமடைந்தது SGRV ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, சம்பவம் பதிவான காணொளியில் தெரிந்தது.
அந்தக் காணொளி, சனிக்கிழமை இரவு 9.55 மணிக்குப் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதற்கு 10 மணிநேரத்துக்குள் 472,000 பார்வைகள் (views) பதிவாயின. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) காலை ஒன்பது மணி நிலவரப்படி 2,400 விருப்பங்கள் (likes), 738 கருத்துகள் பதிவாயின.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு பாடாங் திடலில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும். சுதந்திரமடைந்து 60 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடுகிறது இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு.
சனிக்கிழமை இரவு 7.22 மணிக்கு எல்2எஸ்ஜி (L2SG) கவச வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.
“நார்த் பிரிட்ஜ் ரோட்டில் விபத்து நேர்ந்தது. அந்தக் கவச வாகனம் போக்குவரத்து சமிக்ஞை ஒன்றுடன் மோதியது,” என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
சம்பவத்தின்போது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. சம்பந்தப்பட்ட கவச வாகனம், பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு அப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்ததாகவும் அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து நிகழ்ந்தபோது அந்த எல்2எஸ்ஜி கவச வாகனம் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாகவும் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.