குழந்தைகளைக் கவனிப்பதற்காகப் பெண்கள் பணியிடைக்கால ஓய்வு எடுப்பது வழக்கமான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது திருமண, பிள்ளைப்பேற்றுப் பணிக்குழு வெற்றியின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கையோடு வேலையைச் சிறப்பாக ஒருங்கிணைக்கும் வகையில் பணியிடக் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதும் சிங்கப்பூரர்களின் திருமணம் மற்றும் பெற்றோர் ஆகும் ஆசைகளுக்கு ஆதரவளிக்க அமைக்கப்பட்டுள்ள புதிய இப்பணிக்குழுவின் இலக்குகளில் அடங்கும்.
பெண்கள் எதிர்கொள்ளும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் பின்னடைவுகளைக் குறைப்பதும் குழந்தைகளை வளர்ப்பதற்காகத் தங்களது பணிகளிலிருந்து தற்காலிகமாக விலக முடிவெடுப்பவர்களுக்குப் பணியிடங்கள் முழுமையாக ஆதரவளிப்பதும் பணிக்குழுவுக்குக் கிடைக்கும் வெற்றி என்றார் அமைச்சர் இந்திராணி.
இத்தகைய இடைவெளிகள் தொழில் வாழ்க்கையின் பின்னடைவுகளாகப் பார்க்கப்படக் கூடாது என்று அவர் கூறினார். அத்துடன் தங்களையோ அல்லது தங்கள் முதலாளிகளையோ ஏமாற்றவில்லை என்று பெண்கள் உணர வேண்டும்.
இதைச் செய்ய, முதலாளிகள் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதைத் தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இதில், அவர்கள் பணியில் இல்லாத நேரத்தில் உருவாகியிருக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பணியிடக் கருவிகள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள உதவுவதும் அடங்கும்.
திருமணம், பிள்ளைப்பேற்றுப் பணிக்குழுவுக்கு அமைச்சர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.
சுகாதார அமைச்சின் ரஹாயு மஹ்ஸாம், மனிதவள அமைச்சின் தினேஷ் வாசு தாஸ் மற்றும் கல்வி அமைச்சின் ஜாஸ்மின் லாவ் போன்ற அரசியல் அலுவலகப் பொறுப்பாளர்கள் பணிக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர். பிப்ரவரி மாத வரவுசெலவு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் பணிக்குழு, 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு முழுமையான அறிக்கையை வெளியிடும்.
வீடமைப்பு, பராமரிப்பு, பாலர் பள்ளிக் கல்வி ஆகிய மூன்றும் முன்கூட்டியே மாற்றங்கள் செய்யப்படக்கூடிய துறைகள் என்று அமைச்சர் இந்திராணி கூறினார். மேலும் திருமணம், பிள்ளைப்பேறு தொடர்பான இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணிக்குழு ஒரு பரந்த, நீண்டகால உத்தியை வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

