தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய அமைச்சரவை அமைக்கப்படும்போது பணிக்குழு உறுப்பினர்கள் மாறலாம்: கான்

2 mins read
ea61b5b4-aec7-4640-83dd-fb6c842f55a6
சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் லாரன்ஸ் வோங் புதிய அமைச்சரவையை அமைக்கும்போது சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

பணிக்குழுவின் முயற்சிகளைப் பற்றி வெள்ளிக்கிழமை (மே 16) செய்தியாளர்களிடம் பகிர்ந்தபோது திரு கான் இதனைத் தெரிவித்தார்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் உள்ளிட்டோர் பணிக்குழுவில் தற்போது இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவுடன் வரிவிதிப்பு குறித்து சிங்கப்பூர் நடத்திவரும் பேச்சுவார்த்தை பற்றியும் திரு கான் பேசினார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக எழும் நிச்சயமற்ற சூழலைக் கையாள வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும் வகையில் சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது.

பணிக்குழுவின் தலைவரான திரு கான், அதன் முக்கிய அம்சங்களைப் பற்றி விளக்கியபோது, ஆசியான் அளவில் வரிவிதிப்பை மிகுந்தளவில் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அது தொடர்பான முடிவு இந்த மாதத்திற்குள் எடுக்கப்படும் என்றும் சொன்னார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பெரும்பாலான நாடுகளுக்கு அண்மையில் வரிவிதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்ததை குறித்து பேசிய திரு கான், 90 நாள்கள் கழித்தும் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியே என்றார்.

“90 நாள்களுக்குப் பிறகும் அமெரிக்காவும் சீனாவும் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்துவது சந்தேகம்தான். அது இன்னும் மோசமடையலாம்,” என்று அவர் எச்சரித்தார்.

இதனால் வர்த்தகங்களும் ஊழியர்களும் எதிர்நோக்கும் பாதிப்பு குறித்து பணிக்குழு அவர்களுடன் கலந்துரையாடி வருவதாக திரு கான் சொன்னார்.

“பன்னாட்டு நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகங்களுடன் பேசி அவற்றிடமிருந்துதகவல் சேகரித்து தக்க உதவிகளைச் செய்ய பணிக்குழு கடப்பாட்டுடன் செயல்படும்,” என்று திரு கான் குறிப்பிட்டார்.

உலகப் பொருளியலில் மந்தநிலை என்பதால் வர்த்தகங்கள் தங்கள் தொழில்களை மாற்றியமைக்கத் தயாராக இருக்க வேண்டுமென்றும் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மேலும், புதிய பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் குறித்து கொள்ளும் கவலைகளை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகச் சொன்ன திரு கான், அவர்களுக்கு வேலைப் பயிற்சிகள், வாழ்க்கைத்தொழில் ஆலோசனை போன்றவை வழங்கப்படும் என்று நம்பிக்கை அளித்தார்.

வாழ்க்கைச் செலவினம் தொடர்பான கவலை கொண்டிருக்கும் குடும்பங்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு கான், அரசாங்க உதவி எப்போதும் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்