தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (TPE) ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் 31 வயதுப் பெண்; மற்றவர் 59 வயது டாக்சி ஓட்டுநர்.
அந்த விபத்து குறித்து புதன்கிழமை (ஏப்ரல் 16) முற்பகல் 11.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
இரண்டு கார்கள், ஒரு டாக்சி, நான்கு லாரிகள் சம்ந்தப்பட்ட அந்த விபத்து தெம்பனிஸ் விரைவுச்சாலையிலிருந்து சிலேத்தார் விரைவுச்சாலை (SLE) செல்லும் வழியில் பொங்கோல் ரோடு வெளியேற்றப் பகுதியில் நிகழ்ந்ததது.
விபத்தில் சம்பந்தப்பட்ட இருவர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லேசாகக் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளியை ‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ குழு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) பதிவேற்றியது.
தொடர்புடைய செய்திகள்
லாரிகளுக்கு இடையில் சிக்கிய காரும் டாக்சியும் பலத்த சேதமடைந்ததையும் காரின் மேல் டாக்சி சிதறுண்டு கிடந்ததையும் அதில் காண முடிந்தது. விபத்து நிகழ்ந்த விதம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
மேலும் ஒரு விபத்து
பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு விபத்து வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காலை நிகழ்ந்தது.
மத்திய விரைவுச்சாலையை (CTE) நோக்கிய ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) நேர்ந்த அந்த விபத்தின் விளைவாக 22 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையில் பயணிகளுக்குச் சேவையாற்றும் இரு ‘காஸ்வே லிங்க்’ பேருந்துகளும் ஒரு லாரியும் ஒரு வேனும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து குறித்து காலை 7.55 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் 13 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக அது தெரிவித்தது.
விரைவுச்சாலைகளில் விபத்து நேர்வது அண்மைக் காலமாக தொடர் நிகழ்வாக மாறி வருகிறது.
தற்போது நேர்ந்த விபத்துகளையும் சேர்த்து, பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஐந்து விபத்துகள் கடந்த நான்கு மாதங்களில் நேர்ந்துவிட்டன.
அவற்றில் மூன்று தீவு விரைவுச்சாலையில் நேர்ந்தன.
ஜனவரி 18ஆம் தேதி தீவு விரைவுச்சாலையில் எட்டு கார்களும் ஒரு வேனும் மோதிக்கொண்டதில் நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பின்னர், பிப்ரவரி 21ஆம் தேதி 11 கார்கள், இரண்டு டாக்சி, ஒரு மோட்டார்சைக்கிள் என 14 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் எட்டுப் பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த இரு விபத்துகளும் தீவு விரைவுச்சாலையில்தான் நேர்ந்தன.