சிங்கப்பூரில் காசநோய்ச் சம்பவங்கள் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகக் குறைந்துள்ளன.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் 1,156 காசநோய்ச் சம்பவங்கள் பதிவாயின. இது, 2023ல் பதிவான 1,201ஐவிடக் குறைவு.
வழக்கம்போல் சென்ற ஆண்டும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள், வயதில் மூத்தவர்கள். சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மருந்து அதிகம் பலனளிக்காத காசநோய் வகைக்கு சென்ற ஆண்டு மூவர் ஆளாயினர். அந்த வகை காசநோய்க்கான சிகிச்சை பலன், பொதுவாக மருந்து குணப்படுத்தக்கூடிய காசநோய் வகையுடன் ஒப்பிடும்போது சுமார் 20 விழுக்காடு குறைவாகும்.
மருந்து அதிகம் பலனளிக்காத காசநோய்க்கு ஆளானோரின் எண்ணிக்கை 2023ல் இரண்டாக இருந்தது. சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை மூன்றுக்குக் கூடியது.
வரும் திங்கட்கிழமை (மார்ச் 24) வரும் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. இவை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகின்றன.
டிபி என்றழைக்கப்படும் காசநோய், பொதுவாக நுரையீரல்களைத் தாக்கும் காற்றில் பரவக்கூடிய கிருமித் தொற்றாகும். காசநோயை, மரணம் விளைவிக்கக்கூடிய ஆக மோசமான தொற்றுநோயாக உலகச் சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருக்கிறது.
உலகளவில் 2023ஆம் ஆண்டு 1.25 மில்லியன் பேர் காசநோய்க்குப் பலியாயினர். 10.8 மில்லியன் பேர் காசநோய்த் தொற்றுக்கு ஆளானபடி இருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டில் 1,617 காசநோய்ச் சம்பவங்கள் பதிவாயின. அதற்குப் பிறகு 2017ல் எண்ணிக்கை குறைந்தது, ஆனால் 2018ல், 11 சம்பவங்கள் கூடுதலாகப் பதிவாயின.
அதற்குப் பிறகு காசநோய்ச் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்துவந்துள்ளன.