மூன்று வயதுச் சிறுவனைக் கொடுமைப்படுத்திய ஆசிரியருக்குச் சிறை

மூன்று வயதுச் சிறுவனைக் கொடுமைப்படுத்திய ஆசிரியருக்குச் சிறை

1 mins read
5cefd190-73f3-4871-b629-7f1751400c0b
சிறுவனைக் கொடுமைப்படுத்திய பாலர் பள்ளி ஆசிரியருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வகுப்பறைக்கு வெளியே அழுத மூன்று வயதுச் சிறுவனைத் தரையில் தள்ளி, கன்னத்தில் அறைந்த பாலர் பள்ளி ஆசிரியருக்கு திங்கட்கிழமை (ஜூலை 27) ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2025 செப்டம்பர் 12ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. சிறுவன் அழுவதைச் சக ஆசிரியர் சுட்டிக்காட்டியதும், குற்றஞ்சாட்டப்பட்ட 31 வயதுப் பெண் அச்சிறுவனின் கையைப் பிடித்து இழுத்து வந்து அவனைத் தரையில் வீசினார். சிறுவன் அவரது தொடையில் தட்டவே, பதிலுக்கு அவனது கையில் அவர் அடித்தார்.

பிற ஆசிரியர்கள் கூச்சலைக் கேட்டு வந்ததும், அந்த ஆசிரியர் வகுப்பறைக் கதவை மூடி சிறுவனைக் கண்டித்தார். மேலும், சிறுவனின் கன்னத்தில் இருமுறை அறைந்ததில், அவன் தலை அலமாரியில் மோதியது.

இதைக் கண்ட பள்ளி முதல்வர், சிறுவனை மீட்டு அவனது தாயாருக்குத் தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்துத் தன் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று ஆசிரியர் மிரட்டியதால், சிறுவன் முதலில் உண்மையைக் கூறவில்லை.

அன்றைய தினமே சிறுவனின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்தார். கண்காணிப்புக் கருவியில் பதிவான பதிவுகளைக் காட்டிய பிறகும், தாம் சிறுவனை அடிக்கவில்லை என்றும் தலையைத் தொட்டு மட்டுமே பார்த்ததாகவும் அந்தப் பெண் பொய் கூறினார்.

குறிப்புச் சொற்கள்