தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர்-பெற்றோர் பங்காளித்துவம் முக்கியம்: ஆய்வு

2 mins read
b84ad03f-3be1-4bfa-8ea1-6dddffee59ef
பெற்றோர், ஆசிரியர் என இரு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு பெறும் மாணவர்கள் இயல்பாகவே அதிக ஊக்கமடைவதாகக் கூறுகின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெற்றோரும் ஆசிரியர்களும் தொடர்புகொண்டு, இணைந்து பணியாற்றினால் கூடுதல் ஆதரவு பெறுவதாகக் கருதும் மாணவர்கள் தன்முனைப்புடன் கல்வியில் சிறப்பதாக அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தேசியக் கல்விக்கழகம் சென்ற மாதம் (மே 2024) வெளியிட்ட இரண்டு ஆய்வு முடிவுகள் அவ்வாறு கூறின.

மாணவர்களின் கல்விசார்ந்த ஊக்குவிப்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏற்படுத்தும் தாக்கத்தை அந்த ஆய்வுகள் ஆராய்ந்தன.

பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவு, மாணவர்கள் சுயமாக முடிவெடுப்பதிலும் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்துவதிலும் எவ்வாறு உதவுகிறது, அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க எவ்வாறு ஊக்குவிக்கிறது என்று ஓர் ஆய்வு புரிந்துகொள்ள முயன்றது.

இதன்கீழ், ஏழு பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலை 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் 4,542 மாணவர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களின் ஆதரவு மாணவர்கள் கல்வியில் சிறக்க ஊக்குவிப்பாக விளங்குவதாக மாணவர்கள் கூறினர்.

கல்வியில் முனைப்பு காட்டும்போது ஆசிரியர்களிடமிருந்து கூடுதல் ஆதரவு கிட்டுவதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், பெற்றோர் தரும் ஆதரவுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்களின் ஆதரவு மாணவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பெற்றோர், ஆசிரியர் என இரு தரப்பினரிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவு இயல்பாகவே ஆகச் சிறந்த ஊக்குவிப்பாக விளங்குவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

முனைப்பு, ஆர்வமின்றிக் காணப்படும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் கூடுதல் விழிப்புணர்வுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என்று ஆய்வுக்குழுவினர் கூறினர்.

மற்றோர் ஆய்வில், பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வித் தேர்ச்சி தொடர்பில் முன்வைக்கும் எதிர்பார்ப்புகள் மாணவர்களின் கல்வி சார்ந்த முனைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்று ஆராயப்பட்டது.

சிங்கப்பூரின் ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலை 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் 3,082 மாணவர்களிடம் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், தங்கள் கல்வித் திறன்கள் குறித்து ஆசிரியர்களும் பெற்றோரும் நம்பிக்கை வைத்தால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் முனைப்பைப் பெறுகின்றனர் எனத் தெரியவந்தது.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டின்கீழ் தேசிய கல்விக் கழகம் சென்ற ஆண்டு, குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் குறித்து மேற்கொண்ட ‘டிரீம்ஸ்: வழிநடத்துவோர், செயல்படுத்துவோர் மற்றும் சிங்கப்பூரில் இளமைப் பருவ மேம்பாட்டுக்கான வழிகள்’ எனும் மிகப் பெரிய ஆய்வுத் திட்டத்தின்கீழ் இந்த இரு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்