உட்லண்ட்சில் உள்ள பாலர் பள்ளி ஒன்றின் ஆசிரியர் அங்கு பயிலும் சிறாரைக் கடுமையாக நடத்தியது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. காணொளி திங்கட்கிழமை இணையத்தில் பரவியது.
கிண்டர்லேண்ட் அட் உட்லண்ட்ஸ் மார்ட் பாலர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், நீர் அருந்தும்படி கட்டாயப்படுத்தி ஒரு சிறுவனின் தலையைப் பலமுறை பின்னுக்குத் தள்ளியது, ஒரு குழந்தையின் பிட்டத்தில் புத்தகத்தால் அடித்தது போன்ற செயல்கள் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன. நீர் அருந்தும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்தில் சிறுவன் தன் நெற்றியில் உள்ள ஆசிரியரின் கையைத் தட்டிவிட முயல்கிறான். மற்றொரு சம்பவத்தில் அழுதபடி போராடும் சிறுமியைப் படுக்கவைத்து வாயில் நீரை அவர் ஊற்றுவது தெரிகிறது. இதுகுறித்த விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை கூறியது.
அந்த ஆசிரியரிடம் காவல்துறையும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் விசாரணை நடத்துவதாக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திருவாட்டி போ, விசாரணை நிறைவடைந்த பிறகே இச்சம்பவங்கள் தொடர்பில் முடிவெடுக்க இயலும் என்றார்.
பாலர் பள்ளிப் பிள்ளைகளை அந்த ஆசிரியர் துன்புறுத்தியது தொடர்பான காணொளிப் பதிவுகள் ஃபேஸ்புக்கில் 10,000முறை பகிரப்பட்டுள்ளன.

