ஆசிரியர்கள் தங்களது தனிப்பட்ட கைப்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என்றும் பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான செய்திகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
மாறாக, பெற்றோரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களின் மின்னஞ்சல், அலுவலக எண் போன்ற அதிகாரபூர்வ தொடர்பு வழிகளைப் பயன்படுத்த வேண்டும். அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி அமைச்சின் பள்ளிகள் பணித் திட்டக் கருத்தரங்கில் புதன்கிழமை (செப்டம்பர் 18) பேசிய திரு சான், ஆசிரியர்களைப் பாதுகாக்கவும் பெற்றோர்-ஆசிரியர் தொடர்பை மேம்படுத்தவும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளையும் இதர நடவடிக்கைகளையும் அறிவித்தார்.
முக்கியப் பணிகளுக்கு மனிதவளத்தைப் பயன்படுத்த பள்ளித் திட்டங்களை குறைப்பது, அமைச்சின் ஊழியர்களை அச்சுறுத்தல், அவமதிப்பு அல்லது துன்புறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க புதிய கல்வி அமைச்சு சாசனம் போன்றவற்றையும் அவர் அறிவித்தார்.
ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய எல்லைகள், பள்ளி-வீடு பங்காளித்துவத்திற்கான புத்துணர்ச்சியூட்டும் வழிகாட்டி நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும். பள்ளிகளும் பெற்றோரும் ‘நேர்மறையாகவும், ஆக்கபூர்வமாகவும், மரியாதையுடனும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்’ என்பதற்கு வழிகாட்டுகிறது என்றார் அமைச்சர் சான்.
2024ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரை 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்களுடனான கலந்துரையாடல் மூலம் இந்த வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச கூறியது.
பள்ளிக்குத் தம் பிள்ளை என்ன உடை அணிவது போன்ற விஷயங்களுக்காக பெற்றோர், ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது. ஒரு பிள்ளையின் நலன் அல்லது உடல்நிலை ஆபத்தில் இருக்கும்போது ஏற்படுவதே அவசரநிலை என்று திரு சான் விவரித்தார்.
ஆசிரியர்களை மேலும் பாதுகாக்க, புதிய ஈடுபாட்டு சாசனம் (engagement charter) ஏற்படுத்தப்பட உள்ளது. ஊழியர்களை அச்சுறுத்துகின்ற, அவமதிக்கின்ற அல்லது துன்புறுத்துவோருக்கு எதிராக அமைச்சு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் வேலைப்பளுவும் சரிசெய்யப்படும்.
பெற்றோர் தங்கள் பிள்ளையின் மருத்துவச் சான்றிதழை இணையம் மூலம் பெற்றோர் இணைய வாசல் வழியாக சமர்ப்பிக்கும் புதிய ஏற்பாடும் செயல்படுத்தப்பட உள்ளது. 10 பள்ளிகளில் 2025ஆம் ஆண்டு முதல் பள்ளி செயல்படும் காலகட்டத்தில் முன்னோட்டமாக செயல்படுத்தப்படும். 2025 இறுதிக்குள் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், 2026 முதல் பள்ளிகள், செயல்முறைக் கற்றல் திட்டம் (Applied Learning Programme), வாழ்க்கை கற்றல் திட்டம் (Learning Life Programme) இரண்டில் ஒன்றைக் கொண்டிருக்கலாம் அல்லது இரண்டையும் செயல்படுத்தலாம். எந்திரனியல் அல்லது நாடகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் கற்றதைச் செயல்முறைப்படுத்தும் இத்திட்டங்கள், மாணவர்கள் வகுப்பறைக்கு அப்பால் கற்றுக்கொள்ள உதவுகின்றன.
ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்ற பிற முன்னுரிமைகளுக்காக பள்ளிகள் மனிதவளத்தை பயன்படுத்த இது உதவும். மேலும், மாணவர் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு நேரம் கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சர் சான் குறிப்பிட்டார்.