பாலர் பள்ளிச் சிறாருக்கு நல்வாழ்வைப் பேணும் மின்னிலக்கப் பழக்கங்கள் கற்பிப்பு

பாலர் பள்ளிச் சிறாருக்கு நல்வாழ்வைப் பேணும் மின்னிலக்கப் பழக்கங்கள் கற்பிப்பு

படம்: இ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

24 Oct 2026 - 6:35 pm

2 mins read

பாலர் பள்ளிச் சிறார் நல்வாழ்வைப் பேணும் மின்னிலக்கப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவும் புதிய திட்டத்தைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது.

இணையத்தில் முறையற்ற தகவல்களைத் காணும்போது ஏற்படும் மனக் குழப்பத்தைத் தடுக்க, நம்பகமான பெரியவர்களிடம் உதவி கோர அத்திட்டம் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

இணையப் படங்களுக்குப் பதிலாகக் கத்திக் கூச்சலிடும் கோபக்கார மனிதரின் கேலிச்சித்திரங்கள் காண்பிக்கப்பட்டு, பிள்ளைகளின் மன உணர்வுகள் வகுப்பறையில் ஆராயப்படுகின்றன.

முன்னோடித் திட்டமாக இ-பிரிட்ஜ் பாலர் பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இது கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது.

விவோசிட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) நடந்த மின்னிலக்க நல்வாழ்வுத் திருவிழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய துணை அமைச்சர் 2027ஆம் ஆண்டில் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து மேலும் பல பாலர்பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்படும் என அவர் அறிவித்தார்.

குடும்பங்களிடையே ஆரோக்கியமான இணையப் பழக்கங்களை வளர்க்கும் நோக்கில், கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல் (Screen Smart from the Start) இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

வரம்புகளை அமைத்தல், செயல்படுவதற்கு முன் யோசித்தல், தகாத உள்ளடக்கத்தைப் புகாரளித்தல், பெற்றோர் ஆதரவை நாடுதல் ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளை அப்பயிற்சி உள்ளடக்கியுள்ளன.

நண்பர்களுக்கு உதவுதல், மெதுவோட்டம், நூலகங்களுக்குச் செல்லுதல் போன்ற நற்பழக்கங்களும் கற்றுத்தரப்படுகின்றன.

‘ஸ்கூல் ஃபார் கிட்ஸ்’ பாலர்பள்ளிகள் செப்டம்பரில் 800 சிறாருக்கு இந்தப் பயிற்சியை அறிமுகப்படுத்தின.

இ-பிரிட்ஜ் பாலர்பள்ளிகள் வரும் டிசம்பரில் தங்கள் 30 நிலையங்களில் உள்ள கிட்டத்தட்ட 3,000 குழந்தைகளுக்கு இதனை விரிவுபடுத்தவுள்ளன.

குறிப்புச் சொற்கள்