தொழில்நுட்ப ஆதரவு மோசடிகள்: இவ்வாண்டு $17.5 மி. பறிபோனது

1 mins read
48e0157c-903c-4cb4-8b95-6833e02d66bd
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கணினிக் கிருமியால் கணினி பாதிக்கப்பட்டிருப்பதாகப் பயனர்களை நம்ப வைத்து மேற்கொள்ளப்படும் மோசடிகளுக்கு ஆளானோர் இவ்வாண்டு இதுவரை மட்டுமே பல மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி பாதிக்கப்பட்டுவிட்டதாகப் பயனருக்கு ‘பாப்-அப்’ குறிப்பு வரும். பதறிப்போய் அவர் குறிப்பில் வழங்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பார்.

அந்த எண்ணில் பேசுபவர் மைக்ரோசாஃப்ட் அல்லது ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்வார். கணினி, கிருமியால் ‘தாக்கப்பட்டு’விட்டதாகவும் அதைச் சரிசெய்யத் தாங்கள் உதவப்போவதாகவும் அந்நபர் கூறுவார்.

இவ்வாறே இந்த தொழில்நுட்ப ஆதரவு மோசடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இடம்பெற்ற இந்த வகை மோசடிகள் மீண்டும் தலைதூக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குறைந்தது 198 புகார்கள் தாங்கள் பெற்றிருப்பதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து இத்தகைய மோசடிகளுக்கு ஆளானோர் மொத்தமாக குறைந்தது 17.5 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர் என்று காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் (CSA) திங்கட்கிழமையன்று (ஜனவரி 21) கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்