சிங்கப்பூரிலிருந்து சீனாவின் சாங்ஷா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்னாமுக்குத் திருப்பிவிடப்பட்டது.
விமானம் ஹோ சி மின் நகரில் தரையிறங்கியது.
அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் வேறு வழியின்றி வியட்னாமில் புதன்கிழமை (பிப்ரவரி 5) இரவைக் கழிக்க நேரிட்டது.
ஸ்கூட் விமானம் எண் டிஆர்124, 5ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
சிங்கப்பூருக்கும் சாங்ஷா நகருக்கும் இடையிலான பயண நேரம் ஏறத்தாழ நான்கு மணி நேரம், 40 நிமிடங்களாகும்.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்த விமானிகள் இரவு 8.38 மணி அளவில் ஹோ சி மின் நகரில் விமானத்தை தரையிறக்கினர்.
இந்தத் தகவல்களை ஸ்கூட் விமானச் சேவை நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை ஸ்கூட் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட பயணிகளை ஹோட்டலில் தங்கவைக்க ஸ்கூட் முயன்றது.
ஆனால் வியட்னாமின் குடிநுழைவு விதிமுறை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட பயணிகள் ஹோ சி மின் விமான நிலையத்திலேயே இரவைக் கழித்தனர்.
அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக ஸ்கூட் கூறியது.