டிசம்பர் 10ஆம் தேதி அன்று சிங்கப்பூரிலிருந்து சீனாவின் வூஹான் நகருக்குச் சென்ற ஸ்கூட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நான்கு மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம் செய்த பிறகு சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பியது.
விமானக் கண்காணிப்பு இணையத் தளமான ‘ஃபிளைட்ரேடார்24’ (Flightradar24) தகவலின்படி, ஸ்கூட் TR120 சிங்கப்பூரில் இருந்து இரவு 7 மணியளவில் புறப்பட்டது.
தென்சீனக் கடலில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அது பயணத்திலிருந்து திரும்பி, இரவு 11.30 மணியளவில் மீண்டும் சிங்கப்பூரை வந்தடைந்தது.
இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்கூட்டின் செய்தித் தொடர்பாளர், விமானம் பயணத்தைத் தொடங்கிய சுமார் இரண்டரை மணிநேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகக் கூறினார்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அது மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடிவு செய்யப்பட்டது. TR120 விமானம் டிசம்பர் 10ஆம் தேதி இரவு 11.21 மணிக்கு சாங்கியில் தரையிறங்கியது,” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலை 2.18 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட மாற்று விமானத்தின்மூலம் பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சிற்றுண்டியும் உணவும் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
சீன சமூக ஊடகத் தளமான Xiaohongshuஇல் ஓர் இணையவாசி, தான் அந்த விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறினார். மேலும், விமானத்தில் கண்ணாடி உடைந்ததால் விமானம் திரும்ப நேரிட்டது என்றும் அவர் கூறினார்.
இது குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு ஸ்கூட் பதிலளிக்கவில்லை.

