தொழில்நுட்பக் கோளாறு: மூன்று மணி நேரம் முடங்கிய சிங்கப்பூர் காவல்துறை இணையத்தளம்

தொழில்நுட்பக் கோளாறு: மூன்று மணி நேரம் முடங்கிய சிங்கப்பூர் காவல்துறை இணையத்தளம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Nov 2026 - 7:24 pm

1 mins read

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிங்கப்பூர் காவல்துறை இணையத்தளத்தில் உள்ள மின்சேவைகள் திங்கட்கிழமை (நவம்பர் 16) கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு இயங்கவில்லை.

ஃபேஸ்புக்கில் பிற்பகல் 4.28 மணிக்கு வெளியிட்ட பதிவில், தனது இணையத்தளம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் மின்சேவைகள் இணையவாசல் வழியாகத் தற்போது புகார்களைப் பெற முடிவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இணையத்தளத்தைப் பாதித்திருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் காவல்துறை கூறியது.

முன்னதாக பிற்பகல் 12.50 மணிக்கு வெளியிட்ட பதிவில், சிங்கப்பூர் காவல்துறை இணையத்தளத்தில் இடையிடையே இணைப்பு துண்டிக்கப்பட்டது என்றும் மின்சேவைகள் இணையவாசல் வழியாகப் புகார்களைப் பெற முடியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.

அவசரக் காவல்துறை உதவிக்கு 999 என்ற எண்ணையும் மற்ற விவகாரங்களுக்கு 1800-255-0000 என்ற காவல்துறை உதவித் தொலைபேசி எண்ணையும் அழைக்குமாறு அது பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

கடந்த சில வாரங்களாக உலகளவில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளைத் தொடர்ந்து அண்மைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வாரம், மைக்ரோசாஃப்ட் சேவையில் ஏற்பட்ட முடக்கத்தால் அரசாங்கம், வங்கித் துறைகள் உட்பட சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்டன.

அதோடு, உலகெங்கிலும் உள்ள அரசாங்க அலுவலகங்கள், வர்த்தகர்கள், வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கிப்போயின.

குறிப்புச் சொற்கள்