துன்புறுத்தப்படும் சிறார்களைக் கண்காணிக்கத் தொழில்நுட்பம்: அமைச்சு

துன்புறுத்தப்படும் சிறார்களைக் கண்காணிக்கத் தொழில்நுட்பம்: அமைச்சு

2 mins read
b1d5e314-6ecc-423f-8ed2-b5161cc820b0
2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் 4 வயது மேகன், தாயாலும் அவரின் காதலனாலும் ஓராண்டு துன்புறுத்தப்பட்ட பிறகு மரணமடைந்தார். அவரது மரண விசாரணையில் சமூக அமைப்புகளுக்கிடையே பல நிலைகளில் தவறுகள் நடந்தது கண்டறியப்பட்டது.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு துன்புறுத்தப்பட்ட சிறுவர்கள் வீடுதிரும்பிய பிறகு அவர்களைத் தொழில்நுட்பத்தைக்கொண்டு அணுக்கமாகக் கண்காணிக்கத் திட்டமிடுகிறது.

அவர்கள் மீண்டும் தாக்கப்படும் சாத்தியங்கள் அதன்வழியாக அறியப்பட்டால் உடனே அதனைத் தடுத்துநிறுத்த அமைச்சு வழிவகைகளை ஆராய்கிறது.

அதன் அங்கமாக தொழில்நுட்பத் தீர்வுகளை அமைக்க ஒப்பந்தப் புள்ளி ஒன்றை ஜூலை 6ஆம் தேதி அமைச்சு வெளியிட்டது.

உடல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் சார்ந்தும் ஏற்படக்கூடிய மாற்றங்களை தொழில்நுட்பத்தைக் கொண்டு அறிந்துகொள்வதுடன், சிறுவர்களுக்கு அபாயங்கள் இருந்தால், அவர்களின் அருகில் உள்ள பெரியவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கும் வகையில் செயல்முறைகள் அமையும்.

அந்த வகையில் ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் வழங்க வாய்ப்புகள் இருக்கும் என்று அமைச்சு கருதுகிறது.

சுற்றுச்சூழல் சார்ந்த குறியீடுகளின் உதாரணமாக உரத்த குரலில் வாக்குவாதம் நடப்பது, ஒருவரை அடிப்பது அல்லது வன்முறையைப் பயன்படுத்துவது, அழுகைச் சத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அதேசமயம், உடல் சார்ந்த குறியீட்டில் வழக்கத்துக்கு அதிகமான இதயத் துடிப்பு, உடல் உறுப்புகளில் முக்கிய மாற்றங்கள் போன்றவற்றைக் குறிக்கலாம்.

குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் மீண்டும் இணையும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு விதிமீறல்களை எவ்வாறு தொழில்நுட்பம் கண்டறிந்து மேம்படுத்த முடியும் என்பதை அமைச்சு ஆராய்கிறது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதன்படி, சிறுவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் அதிக உத்தரவாதம் வழங்கமுடியும் என்று அமைச்சு நம்புகிறது.

சிறுவர்கள் கடும் வன்முறைக்கு ஆளாகும் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் அமைச்சின் பாதுகாப்புச் சேவை (PSV) சிறுவர்களைப் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அகற்றிவிடும்.

பாதுகாப்பான மாற்று இடங்களில் அத்தகைய குழந்தைகள் வைக்கப்படுவர் அல்லது தத்துப் பெற்றோரிடம் அனுப்பப்படுவர். அதேநேரம், வன்முறை நிகழ்ந்ததன் காரணங்களைக் கண்டறிய பெற்றோரிடம் அமைச்சும் அதன் பங்காளி அமைப்புகளும் விசாரணை நடத்தும்.

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே, சிறுவர்கள் மீண்டும் இல்லங்களுக்கு அமைச்சினால் அனுப்பிவைக்கப்படுவர்.

தங்களது பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது வீடு வீடாகச் சென்று பார்வையிடுதல், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் இந்தக் குழந்தைகளையும் அவர்களது குடும்பங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று அமைச்சின் பேச்சாளர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிறார்வன்முறைதுன்புறுத்தல்பெற்றோர்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுவிசாரணைதொழில்நுட்பம்