‘என் மீது குற்றமில்லை’: அதிகாரியின் மரணம் குறித்து இளையரின் பேச்சால் நீதிமன்றத்தில் சலசலப்பு

2 mins read
2ed85471-4484-4dc5-9461-afcd1cd496a7
உயிரிழந்த எல்டிஏ அமலாக்க அதிகாரியின் உடல் (இடப்படம்) அவரின் வீவக புளோக்கை ஜூன் 5ஆம் வந்தடைந்தது. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், எஸ்ஜி ரோடு விஜிலாண்டே

வாலிபர் ஒருவரை ஜூன் 4ஆம் தேதியன்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்க அதிகாரி தமது மோட்டார்சைக்கிளில் துரத்திச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

வாலிபர் 2023ஆம் ஆண்டு போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஜூன் 6ஆம் தேதி காணொளி இணைப்புவழி தோன்றிய அந்த 18 வயது மோட்டார்சைக்கிளோட்டி மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மோட்டார்சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டியது உள்பட பல்வேறு போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

போதைப்பொருள் உட்கொண்டபோது வாலிபருக்கு 17 வயது என்பதால் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கறிஞரின்றி தோன்றிய வாலிபர், “என் வாழ்க்கையை நான் எந்த அளவுக்குப் பணயம் வைத்தேனோ, அதே அளவுக்கு அதிகாரியும் அவரின் வாழ்க்கையைப் பணயம் வைத்தார். அவரின் உயிரிழப்புக்கான காரணங்களில் நானும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், என் மீது குற்றமில்லை,” என்றார்.

அந்தச் சொற்களை வாலிபர் கூறியபோது, பார்வையாளர் கூடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சமூக மறுவாழ்வு நிலையத்திற்குச் செல்வதற்குமுன் அக்டோபர் 2023 முதல் தலைமறைவாகிவிட்ட வாலிபரை, பிணையில் விடுவிக்க வேண்டாம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதால் அதிகாரியின் உயிரும் போனதை வழக்கறிஞர் சுட்டினார்.

புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலைப் பகுதியில் ஜூன் 4ஆம் தேதி காலை 10.40 மணியளவில் உரிமமின்றி மோட்டார்சைக்கிள் ஓட்டியதாக வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சீருடை அணிந்த எல்டிஏ அதிகாரி, நிறுத்த உத்தரவிட்டும் வாலிபர் நிறுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.

வாலிபரின் வீட்டில் சமுராய் வாள் ஒன்றும் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

வாலிபரின் வழக்கு மீண்டும் ஜூன் 20ஆம் தேதி விசாரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்