ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) அதிகாலை நடந்த விபத்து ஒன்றின் தொடர்பில் குடிபோதையுடன் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 19 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (டிபிஇ) நிகழ்ந்த விபத்தில் காரும் வேனும் மோதிக்கொண்டன.
விரைவுச்சாலையின் இலியாஸ் ரோடு வெளிவழிக்கு முன்னதாக நிகழ்ந்த விபத்து குறித்து காலை 5.10 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
காரை ஓட்டிய 19 வயது இளையரும் வேனை ஓட்டிய 25 வயது ஆடவரும் அதில் பயணம் செய்த 54 வயது ஆடவரும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
‘சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்ஸிடென்ட் டாட் காம்’ என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டு உள்ளது.
வெள்ளை நிற கார் ஒன்று படுவேகத்தில் வந்ததையும் வேனுடன் அது மோதியதையும் காணொளியில் காணமுடிந்தது.
மோதிய வேகத்தில் கார் கவிழ்ந்தது; அதேவேளை நிலைகுலைந்த வேன் சுழன்றவாறே சாலைத் தடுப்பில் மோதியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்து பற்றிய விசாரணை தொடர்கிறது.

