சிங்கப்பூரில் உள்ள பெருநிறுவனங்களுக்கு இணையாகச் சிறு, பாரம்பரிய, இல்லம் சார்ந்த இந்திய வர்த்தகங்களின் மின்னிலக்கத் தடத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய இணையத்தளம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.
‘தேக்காடாட்எஸ்ஜி’ (TekkaDotSG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தளம், பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற அதன் மின்னிலக்க வெளியீட்டைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப்ரல் 18) பிஜிபி மண்டபத்தில் நடந்தேறிய ‘சங்கமம் @ தேக்கா 2026’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
வர்த்தகங்கள், பல்லினக் கலாசாரப் படைப்புகள், சமூகப் பங்காளிகள் ஆகியவற்றை ஒரே கூரையின்கீழ் ஒருங்கிணைக்கும் மாபெரும் நிகழ்ச்சியாக அமைந்தது ‘சங்கமம் @ தேக்கா’.
50க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட சந்தை, கலாசார நடவடிக்கைகள் எனச் சமூகம், மரபுடைமை, வர்த்தகம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு சிறந்த களமாகவும் இது விளங்கியது.
இதன் ஓர் அங்கமாக நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜூ, தமது தொடக்க உரையில் லிட்டில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூர்ந்தார்.
“தேக்கா என்பது வெறும் சந்தை அல்ல. அது சிங்கப்பூர் இந்தியர்களின் ஓர் உணர்வு,” என்று அவர் குறிப்பிட்டார். பல தலைமுறைகளாக மக்களின் உணர்வுகளோடு கலந்திருக்கும் இந்த அடையாளத்தை இப்புதிய தளம் மாற்றியமைக்கவில்லை என்றும் மாறாக, அதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்கிறது என்றும் அவர் கூறினார்.
சிறப்பான சேவைகளை வழங்கினாலும், பெருநிறுவனங்களைப்போல் விளம்பரம் செய்யப் போதிய வசதியில்லாததால் சிறு வர்த்தகர்கள் இணைய உலகில் பின்தங்கிவிடுகின்றன. இந்த ‘மின்னிலக்க இருட்டடிப்பு’ (digital invisibility) நிலையை மாற்றுவதே இப்புதிய முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகளுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர் முழுவதுமுள்ள இந்திய வர்த்தகங்களுக்கும் இது ஒரு மாபெரும் இணைய வழிகாட்டியாகச் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை எளிதில் கண்டறியவும் வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் படித்துத் தெரிந்துகொள்ளவும் இத்தளம் வழிவகுக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், வியாபாரிகளுக்கு இணையப்பக்கம் அமைத்துத் தருதல், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் வசதியை வழங்குதல் ஆகியவற்றுடன் ‘டேக்சொல்யூஷன்ஸ்’ (TekSolutions) எனப்படும் செயற்கை நுண்ணறிவு, கருவிகள் மூலமாக முன்பதிவுகளை நிர்வகிக்கவும் இது துணைபுரிகிறது.
பெருநிறுவனங்களுக்கு இணையாகச் சிறு வியாபாரிகளுக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுசேர்ப்பதே இதன் இலக்காகும்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இணைய முகவரியை வாங்கிவிட்டதாகத் தளத்தின் நிறுவனர் குமரவேலு பழனிவேலு, 44, கூறினார். இளமைக் காலத்தில் டன்லப் ஸ்திரீட், லிட்டில் இந்தியா ஆர்கேட் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த தமது மாமாவின் பூக்கடையில் அவர் உதவி செய்துள்ளார்.
இருபது ஆண்டுகால மருத்துவத் தொழில்நுட்பப் பணியைத் துறந்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக முழுநேரமாக இதனை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மூத்த வியாபாரிகளுக்கு உதவும் நோக்கத்தையும் வலியுறுத்தினார்.
“பாரம்பரிய வர்த்தகர்கள் தங்களது அன்றாடப் பணியில் கவனமாக இருப்பதால், அவர்களுக்குத் தொழில்நுட்பத்தைத் தேடிச்செல்ல நேரமில்லை. நாமே நேரடியாகக் களமிறங்கி அவர்களின் மின்னிலக்கப் பயணத்தில் கைகோத்துச் செயல்பட வேண்டும்,” என்றார் திரு குமரவேலு.
இதுவரை 100க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் இத்தளத்தில் இணைந்துள்ளதாகவும் இவ்வாண்டு தீபாவளிக்குள் 500 வர்த்தகங்களை இணைக்க இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்திற்கும் (லிஷா) ‘தேக்காடாட்எஸ்ஜி’ தளத்திற்கும் இடையே ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
“லிட்டில் இந்தியாவில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவை குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. சமூக ஊடகங்களில் மட்டுமே விளம்பரம் செய்துவரும் வியாபாரிகள், தங்களது சேவைகளை இந்தத் தளத்தில் ஒருங்கிணைப்பதன்வழி மேலும் பலரைச் சென்றடைய முடியும்,” என்று லிஷா தலைவர் ரெகுநாத் சிவா குறிப்பிட்டார்.
வர்த்தகங்களுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எக்காலத்திலும் ஒரு பெரிய சவாலாகும் என்றார் தந்த்ரா (Tantra) நிறுவனத் தலைவரும் ‘அம்மாகாசே’ (Ammakase) உணவகத்தின் தலைமை நிர்வாகியுமான ஜே.கே சரவணா. இந்த ஒருங்கிணைந்த மின்னிலக்கத் தளம் சிங்கப்பூர் இந்திய வர்த்தக சமூகத்திற்கு ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகச் செயல்படுவதோடு வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் வழிகோலும் என்றார் அவர்.
“கடந்த 25 ஆண்டுகளாக கேக், பலகாரங்கள் செய்யும் இல்லம் சார்ந்த வியாபாரத்தை நடத்தி வருகிறேன். எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளை ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் இந்தத் தளம், வாடிக்கையாளர்கள் எங்களை எளிதில் கண்டறிய உதவும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் ‘விஜிஸ் ஹோம்மேட்ஸ்’ (Viji’s Homemades) இல்ல வர்த்தகத்தின் உரிமையாளர் விஜயமலர் ரமேஷ், 56.
இத்தளத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் வர்த்தகர்கள், www.tekka.sg என்ற பக்கத்தின் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

