சிங்கப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் டெலிகிராம் செயலியில் சேவை கோளாற்றை அனுபவித்ததாகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து சேகரிக்கப்படும் நிலவர அறிக்கைகளை ஒன்றுதிரட்டிச் சேவைத் தடங்கல்களைக் கண்காணிக்கும் ‘டவுன்டிடெக்டர்’ இணையத்தளத்தில் டெலிகிராமில் ஏற்பட்ட கோளாறு குறித்து பதிவானது.
காலை 10.30 மணிக்கு மேல் டெலிகிராம் செயலி குறித்து கிட்டத்தட்ட 4,000 புகார்கள் பதிவாகின.
‘டவுன்டிடெக்டர்’ இணையத்தளத் தகவலின்படி புகார் அளித்தோரில் கிட்டத்தட்ட பாதிப் பயனீட்டாளர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் குறுஞ்செய்தி அனுப்புவதில் பிரச்சினைகளையும் ஐந்து விழுக்காட்டினர் செயலிக்குள் நுழைவதில் சிரமத்தையும் எதிர்கொண்டனர்.
சிங்கப்பூரைத் தவிர இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், இந்தியா, மலேசியா, வியட்னாம், தாய்லாந்து ஆகியவற்றில் உள்ள பயனீட்டாளர்களும் டெலிகிராம் செயலியில் சேவைத் தடங்கலைச் சந்தித்தனர்.
சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் ‘டவுன்டிடெக்டர்’ தளத்தில் பதிவான புகார்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 350 குறைந்தது.


