2025ல் தெமாசெக், ஜிஐசி முதலீடுகளின் மதிப்பு யுஎஸ்$31 பி.: அறிக்கை

2 mins read
53653df9-ba63-48ab-a3f0-295c6a775ca0
மின்னிலக்க உள்கட்டமைப்பு, தரவு நிலையம் முதலியவற்றில் ஜிஐசி நல்ல நிலையில் இருப்பதாக குளோபல் எஸ்டபிள்யூஎஃப் தரவுத் தளத்தின் அறிக்கை குறிப்பிட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசி, தெமாசெக் ஆகியவற்றின் முதலீடுகள் சென்ற ஆண்டு $31 பில்லியன் டாலராக (S$39.88 பில்லியன்) நிலையாக இருந்தது.

தரவுத் தளமான குளோபல் எஸ்டபிள்யூஎஃப் வியாழக்கிழமை (ஜனவரி 1) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையில் அந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

முதலீட்டைப் பொறுத்தவரை, ஜிஐசி நான்காம் நிலையில் வந்தது. ஒப்புநோக்க 2024ஆம் ஆண்டில் அது இரண்டாம் நிலையில் இருந்தது. தெமாசெக் நிறுவனம் கடந்த ஆண்டில் எட்டாம் இடத்தைப் பிடித்தது. முந்திய ஆண்டுடன் ஒப்புநோக்க அது ஓரிடம் முன்னேறியுள்ளது.

உலக அளவில் 400க்கும் மேற்பட்ட அரசு முதலீட்டு நிதி, பொது ஓய்வூதிய நிதி ஆகியவற்றின் நிலையைக் கண்காணிக்கிறது தரவுத் தளம்.

சிங்கப்பூரின் இரண்டு நிதிகளின் முதலீடும் நிலையாக இருந்ததாக அது குறிப்பிட்டது. ஒப்புநோக்க கனடா, வளைகுடா நாடுகளின் முதலீடுகள் அதிகரித்திருந்தன. அனைத்துலக அரசு முதலீட்டு நிதி தொடர்பான நடவடிக்கைகளும் சாதனை அளவை எட்டின.

ஜிஐசியும் தெமாசெக்கும் கவனத்தோடு முதலீடு செய்யும் நிலையை எடுத்திருப்பதையே அது காட்டுவதாகக் கூறப்பட்டது.

அதேநேரம் மலேசியா போன்ற வட்டாரப் பொருளியல்கள், அரசாங்கத்துடன் தொடர்புடைய நெடுங்கால மூலதனத்தை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டின.

முதலீடு நிலையாக இருந்தபோதும், ஜிஐசி, சென்ற ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் ஆகப் பெரிய எல்லை தாண்டிய பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தது. நார்வேயின் என்பிஐஎம் எனும் நார்கெஸ் வங்கி முதலீட்டு நிர்வாகத்துடனும் நெதர்லாந்தின் ஓய்வூதியத்தை நிர்வகிக்கும் ஏபிஜியுடனும் இணைந்து ஜெர்மனியின் எரிசக்திக் கட்டமைப்பான டென்னெட் ஜெர்மனியில் முதலீடு செய்யவிருக்கிறது. அதன்படி, அடுத்த நான்காண்டுகளில் 9.5 பில்லியன் யூரோ (S$14.4 பில்லியன்) முதலீடு செய்யப்படும். அவ்வாறு செய்வதற்குக் கைம்மாறாக, மூன்று நிறுவனங்களும் டென்னெட் ஜெர்மனியில் 46 விழுக்காட்டுப் பங்கைப் பெறும்.

உலக அளவில் ஆகச் செழிப்பான இணை முதலீட்டாளர் எனும் பெருமையை 2018ஆம் ஆண்டிலிருந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது ஜிஐசி. வேறெந்த அரசு முதலீட்டு நிறுவனமும் அந்த அளவுக்குச் செய்ததில்லை.

இந்நிலையில் தெமாசெக், பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் இல்லாத மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை வரும் ஏப்ரல் முதல் தேதியில் செய்யவுள்ளது. அது தெமாசெக் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், தெமாசெக் சிங்கப்பூர், தெமாசெக் பார்ட்னர்‌ஷிப் சொல்யூ‌ஷன்ஸ் என மூன்று பிரிவாகச் செயல்படும்.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனம் உலக அளவில் ஆகச் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் அறிக்கை சொன்னது.

மின்னிலக்க உள்கட்டமைப்பு, தரவு நிலையம் முதலியவற்றிலும் ஜிஐசி நல்ல நிலையில் உள்ளது. ஆண்டின் கருப்பொருளான மின்னிலக்கமயம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அந்த இரண்டு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. அரசு முதலீட்டு நிதி, சென்ற ஆண்டு செயற்கை நுண்ணறிவில் செய்த முதலீடு யுஎஸ்$2.5 பில்லியன். செயற்கை நுண்ணறிவுடன் மின்னிலக்கமயத்தையும் சேர்த்துக்கொண்டால் ஜிஐசியின் முதலீடு யுஎஸ்$13.7 பில்லியன். இதற்கிடையே தெமாசெக் அவ்வாறு செய்த முதலீட்டின் மதிப்பு யுஎஸ்$3.5 பில்லியன். செயற்கை நுண்ணறிவில் மட்டும் அது செய்த முதலீடு யுஎஸ்$2.9 பில்லியன்.

குறிப்புச் சொற்கள்