$518 பில்லியன் வரலாற்று உச்சத்தைத் தொட்ட தெமாசெக் முதலீட்டு நிறுவனம்

$518 பில்லியன் வரலாற்று உச்சத்தைத் தொட்ட தெமாசெக் முதலீட்டு நிறுவனம்

2 mins read
fd95e8f1-4d84-4ba7-83ac-706f6ca692ff
பத்து ஆண்டுகளில் இருமடங்காக வளர்ந்த தெமாசெக்கின் நிகர முதலீட்டுத் தொகுப்பின் மதிப்பு தற்போது $518 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய அரசியல் பதற்றங்களும் சந்தை ஏற்ற இறக்கங்களும் நிறைந்த தற்போதைய சூழலிலும், சிங்கப்பூர் அரசாங்கத்திற்குச் சொந்தமான முன்னணி முதலீட்டு நிறுவனமான தெமாசெக், வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில், முன்னெப்போதும் இல்லாத அளவாக தெமாசெக்கின் நிகர முதலீட்டுத் தொகுப்பின் மதிப்பு $518 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு வளர்ச்சியாகும்.

“இன்றைய சிக்கலான வணிகச் சூழலில், நம் நோக்கம் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியமானது. நாம் தனித்தனியாகச் சிந்திப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த அமைப்பாகச் சிந்திக்க வேண்டும்,” என்று தெமாசெக் தலைமை நிர்வாக அதிகாரி தில்ஹான் பிள்ளை கூறினார். 

இந்த நிதியாண்டில், தெமாசெக் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு 10.5 விழுக்காடு ஒட்டுமொத்த வருவாயை ஈட்டித் தந்துள்ளது. சிங்கப்பூர் முதலீட்டுத்தொகுப்பு நிறுவனங்களின் வலுவான செயல்திறனும் முக்கிய முதலீடுகளை விற்றதன் மூலம் கிடைத்த வருவாயும் இதற்கு முக்கியக் காரணம்.

இருப்பினும், நிதியாண்டின் இறுதி மாதத்தில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட உலகளாவிய பதற்றங்கள் காரணமாக, முதலீட்டுத்தொகுப்பு மதிப்பில் 2 விழுக்காட்டுச் சரிவு ஏற்பட்டது. . 

முதலீட்டுக்கான புதிய கட்டமைப்பு 

தெமாசெக் நிறுவனம் தனது முதலீட்டுத் தொகுப்பை மூன்று தனித்துவமான பிரிவுகளாகப் பிரித்துள்ளது:

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.
  1. தெமாசெக் சிங்கப்பூர் (TSG): SIA, Singtel போன்ற சிங்கப்பூர் நிறுவனங்களை நிர்வகிக்கிறது.
  2. தெமாசெக் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (TGI): உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. 
  3. தெமாசெக் பார்ட்னர்ஷிப் சொல்யூஷன்ஸ் (TPS): மாற்றுச் சொத்துக்களிலும் உத்திப்பூர்வ நிதிக் கூட்டாண்மைகளிலும் கவனம் செலுத்துகிறது.

தெமாசெக் தற்போதும் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா போன்ற பெரிய சந்தைகளில் தனது முதலீடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா தொடர்ந்து தெமாசெக்கின் மிகப்பெரிய முதலீட்டு இலக்காக நீடிக்கிறது.

அதே நேரத்தில், சந்தை அபாயங்களைக் குறைப்பதற்காக தனியார்க்கான கடன் (Private Credit) வழங்கும் வணிகத்தில் தெமாசெக் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 2 விழுக்காடாக இருக்கும் இத்துறை முதலீட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தெமாசெக்கின் 2026ஆம் ஆண்டுக்கான அறிக்கை, அதன் நீண்ட கால நோக்கத்தின் தெளிவைக் காட்டுகிறது. உலகப் பொருளியலில் எவ்வளவு சவால்கள் வந்தாலும், தெமாசெக் தொடர்ந்து சிங்கப்பூரின் பொருளியல் தூணாக விளங்கும் என்பதை இந்த $518 பில்லியன் முதலீட்டுச் சாதனை நிரூபித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்