தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஓர் இந்தியக் கூட்டு நிறுவனத்தின் தனது சிறுபான்மைப் பங்குகளைத் தனது பங்காளியான ஷ்னாய்டர் எலக்ட்ரிக் (Schneider Electric) நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் யூரோவுக்கு (S$8.2 பி.) ரொக்கமாக விற்றுள்ளது. இது, ஆரம்பத்தில் பங்குகளுக்காக தெமாசெக் செலுத்திய தொகையைவிட 10 மடங்கிற்கும் அதிகம்.
ஷ்னாய்டரின் 2020ஆம் ஆண்டு நிதி அறிக்கையின்படி, அந்த ஆண்டு தெமாசெக், இந்திய கூட்டு நிறுவனத்தின் 35 விழுக்காட்டுப் பங்குகளை 530 மில்லியன் யூரோவுக்கு வாங்கியிருந்தது. பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனமான ஷ்னாய்டர் எலக்ட்ரிக், ஷ்னாய்டர் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SEIPL) என்று அழைக்கப்படும் கூட்டு நிறுவனத்தின் மீதமுள்ள 65 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருக்கிறது.
கூட்டு நிறுவனத்தின் முழு உரிமையையும் ஷ்னாய்டர் கொண்டிருப்பது ‘ஒரு மையமாக முடிவெடுக்கும் வேகத்தை ஆதரிக்கும்’ என்று அந்நிறுவனம் புதன்கிழமை (ஜூலை 30) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
ஷ்னாய்டரின் இந்தியாவில் உள்ள குறைந்த மின்னழுத்த, தொழில்துறை தானியக்கத் தயாரிப்புகள் வணிகத்துடன் லார்சன் & டூப்ரோவின் மின்சார, தானியக்கப் பிரிவை இணைத்ததன் மூலம் SEIPL 2020ல் உருவாக்கப்பட்டது. தெமாசெக்குடன் இணைந்து, லார்சன் & டூப்ரோவின் மின்சார, தானியக்கப் பிரிவை கையகப்படுத்தும் தனது திட்டங்களை ஷ்னாய்டர் 2018ல் அறிவித்திருந்தது.
SEIPL உருவானபோதும் அதற்குப் பிறகும் தெமாசெக் முக்கியப் பங்கு வகித்ததாக ஷ்னாய்டர் கூறியது.
இந்தியா இப்போது ஷ்னாய்டரின் மூன்றாவது பெரிய சந்தையாகவும் அதன் நான்கு முக்கிய மையங்களில் ஒன்றாகும் உள்ளது. SEIPL கடந்த ஆண்டு ஏற்றுமதி விற்பனை உட்பட 1.8 பில்லியன் யூரோ சட்டபூர்வ வருவாயைப் பதிவுசெய்தது. இந்தியாவில் துணை நிறுவனங்கள் முழுவதும் மொத்த விற்பனை 2.5 பில்லியன் யூரோவாகும்.