சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், தற்காப்புத் துறையில் அதிக முதலீடுகளை செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரேனில் நடக்கும் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய ராணுவச் செலவுகளை அதிகரித்து வருகின்றன. இதையொட்டி தெமாசெக்கும் தற்காப்புத்துறையின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறது.
தற்போது தெமாசெக்கின் $518 பில்லியன் மதிப்புள்ள ஒட்டுமொத்த முதலீடுகளில் 12 விழுக்காடு மட்டுமே ‘இஎம்இஏ’ என்று குறிப்பிடப்படும் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா வட்டாரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் தற்காப்புத் துறைக்காக மேலும் பரந்த அளவில் முதலீடு செய்ய தெமாசெக் திட்டமிட்டுள்ளது.
“நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 13 பில்லியன் யூரோ (S$19.2 பில்லியன்) வரை இஎம்இஏ வட்டாரத்தில் முதலீடு செய்துள்ளோம்,” என்று தெமாசெக்கின் உலகளாவிய முதலீடுகளுக்கான தலைவரும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிரிவின் தலைவருமான நாகி ஹாமியே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
2029ஆம் ஆண்டிற்குள் இந்த வட்டாரத்தில் சுமார் 17 பில்லியன் யூரோ வரை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளதாக 2024ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
அரசாங்கங்களின் தற்காப்புத் துறை வரவுசெலவுத் திட்டங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தெமாசெக் தற்போது தீவிரமாகக் கவனித்து வரும் ஒரு துறையாகத் தற்காப்புத் துறை உருவெடுத்துள்ளது என்றார் ஹாமியே.
“சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘எஸ்டி இன்ஜினியரிங்’ என்ற ஒரு நிறுவனம் மட்டுமே எங்களிடம் உள்ளது. அதைத் தவிர, நாங்கள் தற்காப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் இப்போது பாதுகாப்பு, இறையாண்மையை கருத்தில்கொண்டு விதிவிலக்காகச் செயல்படவிருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
தெமாசெக், உலகின் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆல்ஃபாபெட், பிங் ஆன் உள்ளிட்ட அனைத்துலக நிறுவனங்கள் மட்டுமன்றி ஆந்திரோபிக், ஓபன்ஏஐ போன்ற தனியார் நிறுவனங்களிலும் இது பங்குகளைக் கொண்டுள்ளது.
“பொறுப்பான நிர்வாகம் என்ற முறையிலும், உயிரியல் மற்றும் ரசாயனப் போர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற முறையிலும் எங்களிடம் மிகத் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 200 மில்லியன் யூரோ அல்லது முன்னுரிமை அடிப்படையில் 500 மில்லியன் யூரோ முதல் ஒரு பில்லியன் யூரோ வரை பெரிய அளவிலான ஐரோப்பிய ஒப்பந்தங்களில் தெமாசெக் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
தெமாசெக் இணையத்தளத்தின்படி அதன் மறைமுக முதலீடுகளில் ஏறக்குறைய 73 விழுக்காடு சிங்கப்பூருக்கு வெளியில் உள்ளது.
இதில், 26 விழுக்காடு அமெரிக்கக் கண்டத்திலும் 17 விழுக்காடு சீனாவிலும் உள்ளது.
ஒட்டுமொத்த முதலீட்டுப் பட்டியலில் சுமார் பாதி பங்குகள் பட்டியலிடப்படாத சொத்துகளில் உள்ளன.
ஐரோப்பாவில் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சுகாதாரப் பராமரிப்பு, எரிசக்தி வரை தெமாசெக் முதலீடுகளை செய்துள்ளது.
இவற்றில் நெதர்லாந்தின் கட்டண நிறுவனமான அட்யென், பிரான்சின் செயற்கை நுண்ணறிவு தொழில் முனைப்பு நிறுவனமான ‘மிஸ்ட்ரல் ஏஐ’ ஆகியவை அடங்கும்.

