தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெமாசெக் நிகர சொத்து மதிப்பு $45 பில்லியன் கூடி $434 பில்லியனானது

3 mins read
a47fc479-19b4-44e7-a031-450b82991e22
தெமாசெக்கின் $434 பில்லியன் நிகர சொத்து மதிப்பு ஒரு சாதனை அளவாகும் என்று அது குறிப்பிட்டது. - படம்: தெமாசெக்

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கின் நிகர சொத்து மதிப்பு, 2025 மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் $434 பில்லியனாக இருந்தது. இது ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட $45 பில்லியன் அதிகம்.

இந்த அதிகரிப்பு, சிங்கப்பூர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த தெமாசெக் சொத்து நிறுவனங்களின் வலுவான செயல்திறனும் சீனா, அமெரிக்கா, இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி முதலீடுகளும் காரணமாகும் என்று தெமாசெக் புதன்கிழமை (ஜூலை 9) தெரிவித்தது. $434 பில்லியன் நிகர சொத்து மதிப்பு ஒரு சாதனை அளவாகும் என்று அது குறிப்பிட்டது.

தெமாசெக்கின் நீண்டகால சொத்துத் தொகுப்புச் செயல்திறனின் அளவீடாக, 20 ஆண்டு மொத்த பங்குதாரர் வருவாய் (டிஎஸ்ஆர்) இரண்டாவது ஆண்டாக 7 விழுக்காடாக நீடித்தது.

அதிக ஏற்ற இறக்கம் கொண்ட ஓராண்டு டிஎஸ்ஆர், 2024 நிதியாண்டில் 1.6 விழுக்காடாக இருந்ததிலிருந்து 11.8 விழுக்காடாக அதிகரித்தது. தெமாசெக்கின் சிங்கப்பூரைச் சேர்ந்த சொத்து நிறுவனங்களின் வலுவான செயல்திறனும் அமெரிக்கா, சீனா, இந்தியாவில் கிடைத்த வலுவான வருவாயும் இதற்குக் காரணமாகும்.

10 ஆண்டு டிஎஸ்ஆர் 5 விழுக்காடாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் 6 விழுக்காட்டிலிருந்து சற்றுக் குறைவு. சாதகமான சந்தை செயல்திறன் கொண்ட ஆண்டான 2015 மார்ச் மாதத்தின் வலுவான வருவாய், அளவீட்டுக் காலத்திலிருந்து நீக்கப்பட்டதால் இந்தச் சரிவு ஏற்பட்டது.

பட்டியலிடப்படாத சொத்துகளைச் சந்தை மதிப்பில் கணக்கிடும்போது, தெமாசெக்கின் நிகர சொத்து மதிப்பு $469 பில்லியனை எட்டியது. இது, ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட $35 பில்லியன் அதிகமாகும்.

நிறுவனத்தின் சிங்கப்பூரைச் சேர்ந்த சொத்து நிறுவனங்களின் இந்த ஆண்டு வலுவான செயல்திறன், அவற்றின் ‘குறிப்பிட்ட இலக்குகளுடன்’ சீரமைக்கப்பட்ட உத்திகளைச் செயல்படுத்துவதில் அவை அடைந்துள்ள முன்னேற்றத்தை நிரூபிப்பதாக தெமாசெக்கின் துணைத் தலைமை நிர்வாகி சியா சோங் ஹுவீ கருத்துரைத்தார்.

“அவற்றின் வணிக அடித்தளங்களை வலுப்படுத்தவும் தேவைப்படும் இடங்களில் மாற்றங்கள் செய்யவும் அபாயங்களைக் குறைக்கவும் மதிப்பு உருவாக்கத்தை இயக்கவும், அவற்றுடன் நாங்கள் தொடர்ந்து துடிப்புடன் ஈடுபடுவதை இது உறுதிப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

“அதிக துடிப்பான சொத்து மேலாண்மை மூலம் எங்கள் முதலீட்டு ஒழுக்கத்தை மேம்படுத்தி வருகிறோம். மேலும், நீண்டகாலத்திற்கு எங்கள் வருவாயை மேம்படுத்த இந்தக் கடுமையான அணுகுமுறையைத் தொடர்வோம்,” என்றார் அவர்.

தெமாசெக்கின் சொத்துத் தொகுப்பில் 41 விழுக்காடு, சிங்கப்பூரைச் சேர்ந்த தெமாசெக் சொத்து நிறுவனங்களில் உள்ளது. இவற்றில் டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்டெல் போன்ற நன்கு அறியப்பட்ட நிறுவனங்களும் அடங்கும்.

மேலும் 36 விழுக்காடு, உலகளாவிய நேரடி முதலீடுகளில் உள்ளது. இவை மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மையுடன் வாழ்வது, பயனீட்டின் எதிர்காலம் நீண்ட ஆயுள் ஆகிய நான்கு கட்டமைப்புப் போக்குகளுடன் சீரமைக்கப்பட்ட நிறுவப்பட்ட அல்லது வளர்ந்துவரும் சந்தைகளின் முன்னிலையாளர்கள்.

சொத்துத் தொகுப்பின் மீதமுள்ள 23 விழுக்காடு பங்காளித்துவங்கள், நிதி, சொத்து மேலாண்மை நிறுவனங்களில் உள்ளது. இவற்றில் துணிகர மூலதன நிறுவனமான வெர்டெக்ஸ், சொத்து மேலாண்மை குழுமமான செவியோரா, தனியார் பங்கு நிறுவனமான 65 ஈக்விட்டி பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

சிங்கப்பூர், தெமாசெக்கிற்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இது, 2025 நிதியாண்டில் அதன் அடிப்படைச் சொத்துகளில் 27 விழுக்காடு பங்கு வகிக்கிறது. தெமாசெக்கின் சொத்து நிறுவனங்களில் 52 விழுக்காடு சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்