சிங்கப்பூரில் புதன்கிழமை (செப்டம்பர் 30) பிற்பகலில் பெய்த பெருமழையால் லிம் சூ காங், உட்லண்ட்ஸ் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் வெப்பநிலையும் 22.7 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையத்தின் இணையத்தளத் தரவுகளின்படி, பிற்பகல் மணி 3.50க்குத் துவாஸ் சவுத் அவென்யூ 3ல் இந்த வெப்பநிலை பதிவானது.
எக்ஸ் தளத்தில் முன்னரே வெளியிட்ட பதிவுகளில் தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, நியோ தியூ ஹார்வெஸ்ட் லிங்க் அருகில் உள்ள லிம் சூ காங் பகுதியிலும் உட்லண்ட்சில் உள்ள ரிவர்சைட் ரோட்டிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
தற்போது இரு பகுதிகளிலும் வெள்ளம் வடிந்துவிட்டதாக பியுபி கூறியது.
தேசியச் சுற்றுப்புற வாரியம் பிற்பகல் 3.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூரின் வடக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளில் பிற்பகல் மணி 3.40 முதல் 4.10 வரை கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக, செப்டம்பரின் இரண்டாம் பாதியில் பெய்யும் மொத்த மழையளவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் நீண்டகாலச் சராசரிக்கு அருகில் இருக்கும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது.
