ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
போக்குவரத்து உதவித் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரத்தச் சுத்திகரிப்பு மையங்களுக்கு நோயாளிகள் சென்றுவருவதற்கு நிதியுதவி அளிப்பதற்காக தேசியச் சிறுநீரக அறநிறுவனம், கோயிலின் ஆதரவை நாடியது.
ரத்தச் சுத்திகரிப்புக்காக நோயாளிகள் ஆண்டுக்கு 300க்கும் மேற்பட்ட முறை மையத்திற்குச் சென்றுவர வேண்டும்.
அத்துடன், பலருக்கு மருத்துவ உதவி வாகனம், சக்கர நாற்காலியை ஏற்றும் வசதியுள்ள வேன், அல்லது டாக்சி கட்டணங்கள், ஈஸிலிங்க் பணநிரப்புதலுக்கு உதவுவது போன்றவற்றுக்கு உதவி தேவைப்படுகிறது.
இந்த நன்கொடை, ஈசூன் ஸ்திரீட் 61ல் உள்ள சிறுநீரகச் சுத்திகரிப்பு மையத்தில் சிகிச்சை பெறும் 40க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும். நன்கொடைத் திட்டத்தில் இணைவது குறித்து ஆலயம் மகிழ்வதாக அதன் தலைவர் எ.நாராயணசாமி தெரிவித்தார்.
“மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.
“அதன் விளைவாக, சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவில் சமூகத் தொண்டாற்றிவரும் நிலையில், மேலும் பங்களிக்க இது மற்றொரு வழியாகும்,” என்று திரு நாராயணசாமி கூறினார்.
நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான அறிகுறி உள்ளோர், தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் 224 பங்கேற்பு மருந்தகங்களில் இலவசச் சிறுநீரகப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.