தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிடாடாரி மருந்தக ஏலக் குத்தகைக்கு விலையும் தரமும் மதிப்பிடப்படும்

2 mins read
69ea56aa-ec7b-41a1-8b6e-c1daf1bcfd50
பிடாடாரி பேட்டையில் பொது மருந்தகம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்ட்லி பீக்கன் பேட்டையில் உள்ள கடை இடத்துக்கான ஏலக் குத்தகைக்குப் பொது மருந்தகங்கள் முன்மொழியத் தொடங்கலாம். அரசாங்கக் குத்தகையின்கீழ் வரும் அந்தப் பேட்டையில் வரவிருக்கும் மருந்தகம் முதன்முறையாக வாடகையின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடப்படாது.

இவ்வாண்டு பிற்பாதியில் முடிவடையும் பிடாடாரி பேட்டையின் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டத்தில் சுகாதார அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் அந்த முன்னோடித் திட்டத்தை மேற்கொள்கின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக கடைகளைப் பொது மருந்தகங்களுக்குக் குத்தகைக்கு விட விலை-தர நடைமுறையைப் பயன்படுத்தி விலை, தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் சுகாதார அமைச்சும் முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளவிருக்கிறது.

இதற்குமுன் பேரங்காடிகள், பிள்ளை பராமரிப்பு நிலையங்கள், உணவங்காடிகள் ஆகியவற்றுக்கு முன்வைக்கப்பட்ட குத்தகைகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விலை-தர அணுகுமுறையைப் பயன்படுத்தி மதிப்பிட்டது.

“சுகாதார அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் குடியிருப்பாளர்களின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ் நாள்பட்ட நோய்ப் பராமரிப்புக்கு ஆதவளிக்கவும் பார்ட்லி பீக்கன் பேட்டையில் உள்ள பொது மருந்தகக் குத்தகைக்கு அதே அணுகுமுறையை பயன்படுத்தவிருக்கிறது,” என்று இரண்டு அரசாங்க அமைப்புகளின் அறிக்கை குறிப்பிட்டது.

பார்ட்லி பீக்கனில் ஏலக் குத்தகைக்கான முன்னோடித் திட்டம் மே 8ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி முடிவடையும். இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் பொது மருந்தகம் அங்குச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ட்லி பீக்கன் பேட்டையில் அமைக்கப்படும் பொது மருந்தகத்துக்கு 100 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 50 சதுர அடி பரப்பளவு கொண்ட கடை இடங்களின் பொது மருந்தகங்கள் செயல்படும்.

முன்னோடித் திட்டத்தின் முடிவை அடிப்படையக் கொண்டு இதர பொது மருந்தக தளங்களுக்கும் அதை விரிவுபடுத்துவது பற்றி சுகாதார அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் ஆராயும்.

குறிப்புச் சொற்கள்