மக்கள் கழகம் கோரிய ஏலக்குத்தகையில் முறைகேடு செய்ததற்காக இரு கட்டுமான நிறுவனங்களுக்கு மொத்தம் $4.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக், செங் சான், யூனோஸ் சமூக மன்றங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்காக டிரஸ்ட்-பில்ட் இஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனமும் ஹுனான் ஃபெங்தியன் கன்ஸ்ட்ரக்ஷன் குரூப் நிறுவனமும், ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பதில் கூட்டுச் சதியில் ஈடுபட்டு ஏமாற்றியதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 23) தெரிவித்தது.
அந்த ஒப்பந்தப்புள்ளிகள் மொத்தம் ஏறக்குறைய $56 மில்லியன் மதிப்பிலானவை. பழுதுபார்ப்பு, சாரங்கட்டுதல், நிலத்தூண் அடிமானம் இடுதல் (piling) உள்ளிட்ட பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகளுக்கானவை அவை.
2023 ஜூலையில் தொடங்கிய ஆணையத்தின் விசாரணையில், ஒப்பந்தப்புள்ளிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இரு நிறுவனங்கள் சதி செய்தது தெரியவந்தது. இதனால், டிரஸ்ட்-பில்ட் நிறுவனத்துக்கு திட்டப்பணிகளை வெல்வதற்கான கூடுதல் வாய்ப்பு கிட்டியது.
டிரஸ்ட்-பில்ட்டின் குத்தகை சமர்ப்பிப்புகளைத் தயார்செய்த ஹுனான் ஃபெங்தியன், மக்கள் கழகத்தின் ஏலக்குத்தகைகளில் ஒவ்வொன்றுக்குமான விலைகளை முன்மொழிந்ததாக ஆணையம் கூறியது. டிரஸ்ட்-பில்ட்டின் ஏலக்குத்தகைகளை மேலும் ஈர்ப்புடையதாகக் காட்ட, ஹுனான் ஃபெங்தியனைவிட அதன் ஏல விலைகள் குறைவாக இருந்தன.
ஒப்பந்தப்புள்ளிகளை வழங்குவதற்கு முன்பு இரு நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற ஆவண சமர்ப்பிப்புகளில் ஒரே மாதிரியான சொற்களும் விளக்கப் படங்களும் பயன்படுத்தப்பட்டதைக் கவனித்த மக்கள் கழகம், இதுகுறித்து ஆணையத்திடம் தெரியப்படுத்தியது.
“ஒப்பந்தப்புள்ளிகளில் இதுபோன்று முறைகேட்டில் ஈடுபடுவதால், நிறுவனங்களால் குறிப்பிடப்படும் விலைகள் உண்மையானவை, போட்டித்தன்மையுடையவை என்ற பொய்யான அபிப்ராயம் ஏற்படும் சாத்தியம் உள்ளது,” என்றது ஆணையம்.
அப்போது இரு நிறுவனங்களாலும் அதிக மதிப்புடைய கட்டுமான ஒப்பந்தங்களை முன்னெடுக்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், டிரஸ்ட்-பில்ட்டுக்கு $4.29 மில்லியனும் ஹுனான் ஃபெங்தியனுக்கு $349,000யும் வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.