ஒன் பொங்கோல் உணவங்காடி நிலையத்தை (ஓபிஎச்சி) நடத்த வரும் ஜனவரி மாதம் ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
தற்போது ஒன் பொங்கோல் உணவங்காடி நிலையத்தை டிம்பர் + ஹாக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (டிஎச்பிஎல்) நிறுவனம் நடத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரை அந்நிறுவனம் அதனை நடத்தும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை (டிசம்பர் 29) தெரிவித்தது.
இந்த ஏற்பாட்டுக்கான மூவாண்டுக் குத்தகை காலம் நிறைவடைவதற்கு ஓராண்டுக்கு முன்னரே டிஎச்பிஎல் வெளியேறுகிறது.
“பேச்சுவார்த்தைக்குப் பிறகு குத்தகைக் காலம் முடிவதற்கு முன்னரே வெளியேற டிஎச்பிஎல், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகிய இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எல்லாச் செயல்பாட்டு அம்சங்களும் தற்போதைய சந்தை நிலவரமும் கருத்தில்கொள்ளப்பட்டன,” என்று டிஎச்பிஎல் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குத்தகைக் காலம் முடியும் வரை ஒன் பொங்கோல் உணவங்காடி நிலையத்தைத் தொடர்ந்து களையிழக்காமல் இருக்கச் செய்யப்போவதாக டிஎச்பிஎல் தெரிவித்துள்ளது என்றும் ஒப்பந்தப்புள்ளிகளை முன்வைக்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் பங்கேற்காது என்றும் வாரியம் சொன்னது.

