59 காசு சிறப்பு விநியோகக் கட்டணம்; ஒரு மணி நேரத்துக்குள் மளிகைப் பொருள்கள் கிடைத்துவிடும்

59 காசு சிறப்பு விநியோகக் கட்டணம்; ஒரு மணி நேரத்துக்குள் மளிகைப் பொருள்கள் கிடைத்துவிடும்

2 mins read
88942de2-67a8-45fb-8af9-5b67765eca3f
தெங்கா குடியிருப்புப் பேட்டையின் முதல் அக்கம்பக்க நிலையமான பிளான்டேஷன் பிளாசாவில் ஜயண்ட் பேரங்காடி ஜூலை 27ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெங்கா குடியிருப்புப் பேட்டையில் ஜயண்ட் பேரங்காடி ஜூலை 27ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

இந்தப் பேரங்காடி தெங்கா குடியிருப்புப் பேட்டையின் முதல் அக்கம்பக்க நிலையமான பிளான்டேஷன் பிளாசாவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய தினத்தை முன்னிட்டு தெங்கா குடியிருப்பாளர்களுக்கு அப்பேரங்காடி சிறப்புச் சலுகை வழங்குகிறது.

‘ஃபூட்பாண்டா’ செயலி மூலம் ஜயண்ட் பேரங்காடியிலிருந்து மளிகைப் பொருள்களை வாங்கும் தெங்கா குடியிருப்பாளர்கள் விநியோகக் கட்டணமாக 59 காசு மட்டுமே செலுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாது, ஒரு மணி நேரத்துக்குள் மளிகைப் பொருள்கள் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு விநியோகக் கட்டணம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரின் 59வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் ஜூலை 27ஆம் தேதியன்று ஹோங் கா நார்த் நாடாளுமன்ற உறுப்பினர் ஏமி கோர் முதல் 590 தெங்கா வட்டாரக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப் பொருள்களை வழங்கினார்.

அவற்றில் சமையல் எண்ணெய், பால், பிஸ்கட் முதலியவை அடங்கும்.

“தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், இந்தப் புதிய குடியிருப்புப் பேட்டையில் நாமும் ஓர் அங்கம் என்ற உணர்வு குடியிருப்பாளர்களுக்கு மேலோங்கி இருக்க வேண்டும். சமுதாயத்தின் அடித்தளமாக குடும்பங்கள் திகழ்கின்றன. சிங்கப்பூரின் அடையாளத்தை வடிவமைப்பதுடன், நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் பண்புநெறிகளை குடும்பங்கள் புகுத்துகின்றன.

“தெங்கா வட்டாரத்துக்கு குடும்பங்களை வரவேற்கிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்று அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார் டாக்டர் ஏமி கோர்.

தெங்கா குடியிருப்புப் பேட்டை படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் கூடுதல் வசதிகள் அமைத்துத் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்