டிஇபி பலகாலமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: தகவல் தெரிந்தவர்கள்

2 mins read
255fcfc4-797f-416b-892f-fef03719c73c
மனிதவள அமைச்சு. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறுகிய காலத்துக்கு சிங்கப்பூரில் நிபணத்துவப் பயிற்சி மேற்கொள்ளும் வெளிநாட்டினருக்கான வேலை அனுமதி அட்டை பல ஆண்டுகளாகவே தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவதாக சம்பந்தப்பட்ட துறைகளில் தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

பாத்திரம் கழுவுதல் போன்ற நிர்வாகப் பிரிவுகளில் இடம்பெறாத வேலைகளுக்கு இந்த வேலை அனுமதி அட்டையைக் கொண்டு முதலாளிகளும் முகவர்களும் வெளிநாட்டவரை வேலைக்கு எடுத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பயிற்சிக்கான வேலை அனுமதி அட்டையின்கீழ் (டிஇபி) வெளிநாட்டவரை வேலைக்கு எடுக்க வரி செலுத்துவது போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. குறைந்த திறன்கள் தேவைப்படும் வேலைகளுக்கு ஆளெடுக்க வேலை அனுமதிச்சீட்டு, எஸ் பாஸ் போன்ற வேலை அனுமதி அட்டைகளுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் உண்டு. அதனால் டிஇபி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தகவல் தெரிந்தவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

டிஇபி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பான டிடபிள்யுசி2 (TWC2) கடந்த மே மாதம் இந்த விவகாரத்தை வலைப்பதிவு மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து டிஇபி வேலை அனுமதி அட்டையை வைத்துள்ள பல குறைந்த வருமான ஊழியர்கள் தங்களிடம் உதவி நாடியதாக டிடபிள்யுசி2 தெரிவித்தது.

தங்களின் வேலை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டதைவிடக் குறைவான சம்பளம் வழங்கப்பட்டது, வேலை அனுமதி அட்டை கைக்கு வருவதற்கு முன்னரே வேலை செய்யுமாறு தங்களிடம் கூறப்பட்டது, குறைந்த திறன்கள் தேவைப்படும் வேலைகளைச் செய்தபோதும் ‘நிர்வாக அதிகாரிகள்’ என்று தங்களின் வேலைப் பொறுப்பு பதிவுசெய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் குறிப்பிட்டனர் என்று டிடபிள்யுசி2 சொன்னது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மனிதவள அமைச்சு, இவ்வாண்டு டிஇபி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக 120 புகார்கள் கிடைத்ததாக இம்மாதம் 19ஆம் தேதி தெரிவித்தது. அமைச்சு, முந்தைய ஆண்டுப் புகார்களுடன் ஒப்பிட்டுப் புள்ளி விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக சுமார் 6,800 டிஇபி வேலை அனுமதி அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சேவைத் துறை வேலைகளுக்குத்தான் பெரும்பாலான டிஇபி விண்ணப்பங்கள் வருவதாக அவர் குறிப்பிட்டார்.

டிஇபிக்குக்கீழ், வெளிநாட்டு மாணவர்கள் அல்லது ஒரு நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளையில் பணிபுரிபவர்கள் சிங்கப்பூரில் நிபுணத்துவ, மேலாளர், நிர்வாக, தனித்திறன் வேலைகளுக்குப் பயிற்சி மேற்கொள்ளலாம். அவர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 3,000 வெள்ளியாக இருக்கவேண்டும்.

அதேபோல், டிஇபிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கல்வி பயில்பவர்களாக இருக்கவேண்டும் அல்லது அவர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 3,000 வெள்ளியாக இருக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்