தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடியாகச் சண்டையை நிறுத்த இணக்கம்

2 mins read
cb2fc212-45a7-44eb-ae0a-a53e25b97d56
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் (நடு) கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசினார் (ஜூலை 28). அவருடன் கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் (இடம்), தாய்லந்தின் தற்காலிகப் பிரதமர் ஃபும்தாம் வீச்சாயாச்சாய் ஆகியோர் இருக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: தாய்லாந்தும் கம்போடியாவும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாகச் சண்டையை நிறுத்த இணங்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் ஐந்து நாள்களாக நடந்த மோதலில் 35 பேர் மாண்டனர். அங்கு வசித்த பல்லாயிரம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிட்டது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கோலாலம்பூரில் இரு நாடுகளின் தலைவர்களுடன் சமரசப் பேச்சை முன்னெடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய திரு அன்வார் ஜூலை 29 காலை விடியும்போது சண்டை நிறுத்தம் நடப்புக்கு வரும் என்றார்.

“பதற்றத்தைத் தணித்து அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட இது முதல் படி,” என்று அவர் கூறினார்.

சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்த பிறகு, இரு தரப்புகளின் ராணுவ மூத்த அதிகாரிகளும் பேச்சு நடத்துவர் என்று அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டால் ஆசியான் நாடுகளின் தற்காப்பு அதிகாரிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் திரு அன்வார் சொன்னார். பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் பீரங்கிகள், ஏவுகணைகள், துப்பாக்கிகளைக் கொண்டு மூர்க்கமாகச் சண்டையிட்டன. அந்தப் பகுதியில் பல பழங்காலக் கோயில்கள் அமைந்திருக்கின்றன.

தாய்லாந்தும் கம்போடியாவும் எல்லைப் பகுதியில் இதற்கு முன்னர் 2008 முதல் 2011 வரை கடும் மோதலில் ஈடுபட்டிருந்தன. 1907ல் கம்போடியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியாளர்கள் எல்லைப் பகுதியைச் சரிவர வரையறுக்காததால் இரு தரப்பும் அதற்குச் சொந்தம் கொண்டாடுகின்றன.

தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் ஃபும்தாம் வீச்சாயாச்சாயும் கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டும் புத்ராஜெயாவில் உள்ள மலேசியப் பிரதமரின் இல்லத்தில் பிற்பகல் 3.15 மணியளவில் சந்தித்தனர். பேச்சுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவருமான திரு. அன்வார், சண்டையை உடனடியாக நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமைச்சின் அதிகாரிகள் அமைதிப் பேச்சில் உதவ மலேசியாவில் இருந்ததாகச் சொன்னார். சீனாவின் பேராளர்களும் பேச்சில் கலந்துகொள்வர் என்று கம்போடியா முன்னதாகக் கூறியிருந்தது.

வார இறுதியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடியாகச் சண்டையை நிறுத்த இணங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். பூசல் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் மிரட்டியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்