மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஆசியான் நாடுகள் திங்கட்கிழமை (டிசம்பர் 22) பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாய்லாந்து, கம்போடியா தற்காப்பு அதிகாரிகள் புதன்கிழமை (டிசம்பர் 24) சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூர் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும், பதற்றத்தைக் குறைக்க வேண்டும், பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும்,” என்று டாக்டர் விவியன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
“ஆசியானின் சிறந்த எதிர்காலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆசியான் உறுப்பினர்கள் தாய்லாந்து-கம்போடியா நிலவரம் குறித்து பேசினர். இது இருநாடுகளுக்கு இடையில் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முதல்படியாக இருக்கும்,” என்று அமைச்சர் விவியன் கூறினார்.
“இருநாட்டு எல்லையில் நடக்கும் சண்டையால் பலர் உயிரிழக்கின்றனர், இது சிங்கப்பூருக்கு பெரும் கவலையாக உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
மூன்று வாரங்களுக்கு மேலாக நடக்கும் சண்டையில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

