தாய்லாந்தில் கரைபுரண்டோடிய வெள்ளம் காரணமாக 175க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களைச் சிங்கப்பூர் ஆயுதப் படை புதன்கிழமையன்று (டிசம்பர் 3) விநியோகம் செய்தது.
ஏழு டன்னுக்கும் அதிகமான அத்தியாவசியப் பொருள்களை அது விநியோகம் செய்ததாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை சாங்கி வட்டார மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு மையம் செய்ததாகத் தற்காப்பு அமைச்சு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
அத்தியாவசியப் பொருள்கள், சிங்கப்பூர் ஆயுதப் படைக்குச் சொந்தமான சி-130 ரக போக்குவரத்து விமானம் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.
விநியோகம் செய்யப்பட்ட பொருள்களில் உணவு, தண்ணீர், மருந்து, சுகாதாரம் தொடர்பான பொருள்கள் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால, நெருக்கமான உறவை இந்த மனிதாபிமான உதவி பிரதிபலிப்பதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
கனமழை, பலத்த காற்று, புயல் ஆகியவை காரணமாக தென்கிழக்காசியாவிலும் இலங்கையிலும் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இவற்றின் காரணமாக உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஆகியவை ஏற்பட்டுள்ளன; பல வீடுகள் அழிந்துவிட்டன; பலர் வசிக்க இடமின்றித் தவிக்கின்றனர்; முக்கியமான உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
புதன்கிழமை (டிசம்பர் 3) நிலவரப்படி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு காரணமாக வட்டார நாடுகளில் ஏறத்தாழ 1,450 பேர் மாண்டுவிட்டனர்.

