தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைப்பூசத் திருவிழா 2025: டிசம்பர் 27லிருந்து பதிவு செய்துகொள்ளலாம்

2 mins read
4e6c8049-b93b-4aa5-ae06-588a65ab0987
காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்த இருப்பவர்களுக்கென்றே 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதியன்று சிறப்பு விளக்கவுரை நடத்தப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தைப்பூசத் திருவிழா 2025ல், பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கான அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் பக்தர்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று தைப்பூசத் திருவிழா அனுசரிக்கப்படுகிறது.

உலகமெங்கும் உள்ள தமிழ் இந்துக்களுக்குத் தைப்பூசத் திருவிழா மிகவும் முக்கியமான சமய நிகழ்வுகளில் ஒன்று.

முருகப் பெருமானைத் துதிக்கும் வண்ணம் பால் குடம், பால் காவடி, அலகு காவடி போன்றவற்றை ஏந்தி பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவர்.

தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என வேண்டிக்கொண்டு அல்லது நிறைவேறிய வேண்டுதல்களுக்கு நன்றி தெரிவித்து பக்தர்கள் காவடிகள், பால் குடங்களை ஏந்திச் செல்வர்.

2024ஆம் ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழாவில் 18,000 பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அவர்களில் 274 பேர் காவடிகளையும் 12,800 பேர் பால் குடங்களையும் ஏந்தினர்.

அடுத்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 10ஆம் தேதி இரவு 11.30 மணிக்குத் தொடங்கும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் டிசம்பர் 21ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து காவடிகள், பால் குடங்களை ஏந்திச் செல்வர்.

அவர்களது பயணம் தேங்க் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நிறைவடையும்.

அடுத்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழாவில் பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 11 மணிக்குள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்திவிடும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காவடி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்த இருப்பவர்களுக்கென்றே 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதியன்று சிறப்பு விளக்கவுரை நடத்தப்படுகிறது.

இந்த விளக்கவுரை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

காவடி ஏந்துபவர்கள் ஜனவரி 5ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

காவடிகள் செல்லும் பாதையில் செவிகளுக்கு இசை விருந்து அளிக்க விரும்பும் இசைக் கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்கள் தைப்பூசத் திருவிழாவுக்கான அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் கூறியது.

காவடிகள் செல்லும் பாதையிலும் இரு கோயில்களிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்றும் புகைப்பிடிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவைப் பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ளவும் பதிவு செய்துகொள்ளவும் டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் thaipusam.sg எனும் இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்