பக்தர்களின் எண்ணிக்கை அதிகபட்சத்தை எட்டியதால் தைப்பூசம் 2026 பங்கேற்புக்கான பதிவு நிறைவடைகிறது

2 mins read
d324287b-4f95-40db-8fa6-ba7d585eae28
இரு கோயில்களும் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் நிர்வகிக்கக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கையை எட்டிவிட்டதால் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசத்தில் பங்கேற்பதற்கான பதிவு முடிந்துவிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தைப்பூசம் 2026 திருவிழாவில் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரும்பும் பக்தர்களும் அதேவேளையில் இன்னும் பதிவு செய்யாதவர்களும் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும் பிற கோயில்களில் அவ்வாறு செய்வதைப் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் திருவிழாவிற்குப் பதிவுசெய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவை பாதுகாப்பாக நிர்வகிக்கக்கூடிய வரம்பை எட்டியுள்ளதாக, அந்தக் கோயில்களும் இந்து அறக்கட்டளை வாரியமும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

பொதுப் பாதுகாப்பு, நியாயமான காத்திருப்பு நேரங்கள், அனைத்து பக்தர்களுக்கும் ஓர் ஒழுங்கான அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், கோயில்களில் அதிக பங்கேற்பாளர்களை அனுமதிக்க முடியாது என்று கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பங்கேற்பாளர்களுக்கான பதிவு தொடங்கியது.

“தைப்பூசத்துடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் ஆழத்தை நாங்கள் முழுமையாக உணர்கிறோம். இருப்பினும், எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பை ஏற்றுக்கொண்டால், அதிகப்படியான நீண்ட காத்திருப்பு நேரம், குறிப்பிடத்தக்க செயல்பாட்டு சிரமம், அதிக கூட்டம், அதிகரித்த பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அமைக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்து பக்தர்களுக்கும் சீராகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்படுவதும் முக்கியம்,” என்றும் அறிக்கை கூறுகிறது.

2025 தைப்பூசத்தின்போது, ​​சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 16,000 பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கும் டேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கும் இடையிலான 3.2 கி.மீ. நடைப் பயணத்தை மேற்கொண்டனர்.

தைப்பூசம் குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ தைப்பூச இணையத்தளத்திலும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக ஊடகத் தளங்களிலும் காணலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்