தைப்பூசத்திற்கான முன்பதிவுகள் சீராய் நடைபெற்றன: தினே‌ஷ் வாசு தாஸ்

தைப்பூசத்திற்கான முன்பதிவுகள் சீராய் நடைபெற்றன: தினே‌ஷ் வாசு தாஸ்

2 mins read
4b2d73cc-7ff4-4e9e-ae80-e12205352c6e
இவ்வாண்டு தைப்பூசத்தில் 25லிருந்து 30 விழுக்காடு கூடுதல் பக்தர்கள் பங்கேற்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தினே‌ஷ் வாசு தாஸ்/ ஃபேஸ்புக்

தைப்பூச விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து நடைமுறைகளும் சீராய் நடைபெற்றதாகக் கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலிலும் தைப்பூசத் திருவிழாவில் பால் குடம் ஏந்த விரும்பும் பக்தர்கள் சுமுகமாக முன்பதிவு செய்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

அனைத்தையும் சரிவர செய்த கூட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கும் சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கும் திரு தினே‌ஷ் நன்றி கூறினார்.

இதற்குமுன், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கான எண்ணிக்கை அதிகபட்ச வரம்பை எட்டிவிட்டதால் முன்பதிவு முடிந்துவிட்டதாக ஜனவரி 27ஆம் தேதி ஏற்பாட்டுக் குழு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதையடுத்து, பக்தர்கள் பலரும் இணையம் வழி ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்களின் நலன் கருதி, அதற்கான முன்பதிவை நீட்டிப்பதாகத் திரு தினேஷ் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் தைப்பூசத் திருவிழாவில் இவ்வாண்டு 25லிருந்து 30 விழுக்காடு கூடுதல் பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நீண்ட வரிசைகள், கூடுதலான காத்திருப்பு நேரம், தாமதங்கள் ஆகியவற்றைப் பக்தர்கள் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

ஆலயங்களிலும் பாத ஊர்வலப் பாதைகளிலும் கூட்ட நெரிசலும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் திரு தினே‌ஷ் சொன்னார். எனவே, அனைவரும் ஒத்துழைத்து, வழிகாட்டிகளைப் பின்பற்றி பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று திரு தினே‌ஷ் அறிவுறுத்தினார்.

சிறிய பிள்ளைகளை வைத்திருப்போர், மூத்தோர் இருக்கும் குடும்பங்கள் எனப் பெரிய கூட்டங்களைச் சமாளிக்க முடியாதோர், உச்ச நேரங்களையும் பரபரப்பான நேரங்களையும் தவிர்க்கும்படி திரு தினே‌ஷ் கூறினார். அத்தகையோர் பிற கோயில்களுக்கும் செல்லலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற அயராது உழைக்கும் ஆலய நிர்வாகத்தினர், தொண்டூழியர்கள், காவல்துறை உறுப்பினர்கள், தண்ணீர் பந்தல்களை அமைத்திருப்போர் என அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் திரு தினே‌ஷ் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்