இந்த ஆண்டுத் தைப்பூசத்தை முன்னிட்டுத் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற பக்தர்கள் பலர் ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் அருகே நேரத்தோடு கூடிவிட்டனர்.
மங்கலகரமான மஞ்சள் உடைகளில் பக்தி மிளிரத் தங்கள் குடும்பத்தினரோடு திரண்டுள்ளனர் பக்தர்கள்.
பதிவு செய்துகொண்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி சரோஜினி பத்மநாதன் பக்தர்கள் யாவரும் பொறுமைக் காக்கும்படி கேட்டுக்கொண்டார். பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்ட பக்தர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தற்காலிகக் கூடாரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய பலரும், ஃபேரர் பார்க் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளியில் தங்கள் பால்குடங்களைத் தயார் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தமிழ் முரசிடம் பேசினார் பக்தர்களில் ஒருவரான திருமதி வித்யா வெற்றிலிங்கம் 43.
“என் பிள்ளைகளுடன் வருவதால் முன்னதாகவே வந்துவிட்டேன். மேலும், நேரத்துடன் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டால், மறுநாளும் காவடிகள் பார்ப்பதற்குப் பிள்ளைகளுடன் வரலாம் என எண்ணினேன்” என்று கருத்துரைத்தார் அவர்.
தொடர்ந்து பேசிய திருமதி வித்யா, “நானும் எனது நண்பர்களும் சேர்ந்து நேர்த்திக்கடனை நிறைவேற்ற வந்தோம். எங்கள் அனைவருக்கும் வெவ்வேறு முன்பதிவு நேரம் இருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒன்றாக முன்கூட்டியே வந்து காத்திருக்க முடிவு செய்தோம்,’’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு பக்தரான திரு ராஐகோபால் ராம்கி 35, “நாங்கள் விரும்பிய நேரத்திற்கு எங்களால் பதிவு செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தார்.
“முன்பதிவு செய்திருந்தாலும் நாங்கள் முன்கூட்டியே வந்துவிட்டதால் எங்கள் வேண்டுதலை முதலில் நிறைவேற்றிவிடலாம் என எண்ணினோம். ஆனால், பக்தர்களுக்கு தரப்பட்ட முன்பதிவு நேரம் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று கூறினார் திரு குமார்,40.

