தைப்பூசத் திருவிழா 2026: லிட்டில் இந்தியா வட்டாரத்தைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்து

2 mins read
d891b4ff-a8c5-4e93-9ef5-7450bfc77712
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த தைப்பூசத் திருவிழாவின்போது நடைபெற்ற பாத ஊர்வலத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் முதன்மையான இந்துத் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது.

அதனையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை இந்து அறக்கட்டளை வாரியம் மேற்கொண்டு வருகிறது.

பக்தர்களுக்குக் கூடுதல் நுழைவாயில், தைப்பூசம் குறித்த விவரங்களை உடனுக்குடன் பெற புதிய ‘வாட்ஸ்அப்’ தகவல் தளம் ஆகியவை இவ்வாண்டு வாரியம் புதிதாகத் தொடங்கியுள்ள நடவடிக்கைகளில் அடங்கும்.

தைப்பூசப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், வழக்கத்தைவிட கூடுதல் எண்ணிக்கையிலான பக்தர்கள் விழாவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகம், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் ஆகியவை திங்கட்கிழமை (ஜனவரி 19) அன்று இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும், ஊர்வலப் பாதையிலும் விழா நடைபெறும் கோயில்களிலும் அதிக அளவில் கூடும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சாலை மூடல்கள், பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைப்பூசப் பெருவிழா காலத்தில் லிட்டில் இந்தியா வட்டாரத்தைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சிராங்கூன் ரோடு, தேங் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, பினாங்கு லேன், பினாங்கு ரோட்டை நோக்கிச் செல்லும் கிளமென்சியூ அவென்யூ, ஆர்ச்சர்ட் ரோட்டுக்கும் பினாங்கு ரோட்டுக்கும் இடைப்பட்ட ஹாண்டி ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு, பிரின்செப் ஸ்திரீட், சிலிகி ரோடு ஆகியவை ஜனவரி 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பால்குடம் மற்றும் காவடிகளை எடுத்துச் செல்ல விரும்பும் பக்தர்கள் தைப்பூச இணையத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கோயிலுக்குள் காத்திருக்கும் இடங்கள் குறைவாக இருப்பதால், பங்கேற்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வரக்கூடாது என்று ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஊர்வலப் பாதையில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, பக்தர்களுடன் வரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருவிழாவைக் காண விரும்புவோர் ஊர்வலப் பாதையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, இரண்டு கோயில்களுக்கும் அருகில் கூட்டமாகச் சேருவதைத் தவிர்க்கலாம். இதனால் பங்கேற்பாளர்கள் எளிதாகச் சுற்றி வர முடியும்.

2025ஆம் ஆண்டில், தைப்பூசத்தன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கும் தேங் ரோடு கோயிலுக்கும் இடையே 3.2 கி.மீ. தூரத்தை 16,000 பக்தர்கள் கடந்து சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்