சிங்கப்பூரின் பெரும் இந்துத் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
விழாவின் அங்கமாக பக்தர்கள், சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு ஊர்வலமாக நடந்து செல்வர். பால்குடம், காவடி முதலிய வேண்டுதல்களையும் அவர்கள் நிறைவேற்றுவர்.
2026ல் வேண்டுதல்களைச் செலுத்த விரும்பும் எல்லா பக்தர்களுக்கும் இணைய முன்பதிவு கட்டாயம். https://thaipusam.sg என்ற இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பால்குடம், பால் காவடி, தொட்டில் காவடி ஆகியவற்றுக்காகப் பக்தர்கள் டிசம்பர் 10ஆம் தேதி காலை 9.15 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
காவடிகளைச் சுமந்து செல்ல விருப்பமுள்ளோர்க்கான சிறப்புச் சந்திப்பு டிசம்பர் 10ல் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படும்.
ரத, அழகுக் காவடிகளுக்குப் பக்தர்கள், டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.15 மணி முதல் மேற்கூறிய அதே இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.
பக்தர்கள், தாங்கள் பதிவு செய்துகொண்டுள்ள நேரத்திற்குத் தாமதமின்றி வரவேண்டும் என இந்து அறக்கட்டளை வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோயிலிலுள்ள இட வரம்புகளைக் கருத்தில்கொண்டு பக்தர்கள் பால்குடத்தை வீட்டிலேயே தயாரித்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்பதிவு செய்துள்ள பக்தர்கள், தங்களுக்கான கியூஆர் குறியீட்டை ஆலய நுழைவாயிலில் அதிகாரிகளிடம் காண்பிக்கவேண்டும்.
இரண்டு கோயில்களிலும் அளவுக்கு அதிகமாகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும்படி இந்து அறக்கட்டளை வாரியம், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
தைப்பூசம் 2025ல், கிட்டத்தட்ட 16,000 பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலப் பாதையில் ஹேஸ்டிங்ஸ் ரோடு, சிலிகி ரோடு, ஷோர்ட் ஸ்திரீட், கேத்தே கிரீன் ஆகிய இடங்களில் நேரடி இசைக்கான கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மது அருந்துவதற்கும் சிகரெட், மின் சிகரெட் ஆகியவற்றைப் புழங்குவதற்கும் தடை இருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.

