பக்திப் பரவசத்துடன் அணிதிரண்ட பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தைப்பூச நாளன்று தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
காவடி ஊர்வலம், பால் குடக் காணிக்கை இவற்றுடன் வேலை உயர்வு, திருமணம் கைகூடுதல், பிள்ளைப்பேறு, கல்வியில் சிறப்பு என்று கணக்கிலடங்கா வேண்டுதல்களோடு வலம்வந்த பக்தர்களால் லிட்டில் இந்தியா - டோபி காட் வட்டாரங்களைப் பக்தி உணர்வு சூழ்ந்திருந்தது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) நள்ளிரவு தொடங்கிய 2025ஆம் ஆண்டிற்கான தைப்பூச வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) பின்னிரவு வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பங்கள் கொண்டாடிய தைப்பூசத் திருவிழா
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் வரை ஏறக்குறைய நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்ற பக்தர்கள், தைப்பூசத் திருவிழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்றனர்.
கைக்குழந்தையுடன் வந்திருந்த திருவாட்டி ஷர்மளா, “நான் முதன்முறையாக ஐந்து மாதக் கைக்குழந்தையுடன் வந்துள்ளேன். பிள்ளைப்பேற்றுக்காக வேண்டுதல் செய்திருந்தேன். குழந்தை பிறந்த மகிழ்ச்சியுடனே தற்போது பால்குடம் தூக்கியிருக்கிறேன்,” என்று கூறினார்.
சிறார்களுடன் பால்குடம் ஏந்தி வந்திருந்த திருவாட்டி பொன்விழி, ஏழு ஆண்டுகளாகத் தன் பிள்ளைகளுடன் தைப்பூசத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்தார்.
முறையே ஐந்து, எட்டு வயது நிரம்பிய இரு மகன்களுடன் பங்கேற்ற இவர், “வேண்டுதலைக் குடும்பமாக நிறைவேற்றுகையில் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பது என் நம்பிக்கை,” என்றார்.
இதற்கிடையே திருமணம் கைகூடவும் வாழ்வில் வளம் சிறக்கவும் வேண்டி காவடி சுமந்து வந்திருந்தார் விஷ்ணுராம் பெரியசாமி, 27.
தொடர்புடைய செய்திகள்
“ஆறு ஆண்டுகளாகக் காவடி செலுத்தி வருகிறேன். குடும்பமாகப் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபடுவது மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம்,” என்றார் அவர்.
வெயிலின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தாலும் நேர்த்திக்கடனைச் செலுத்தி முடித்த மகிழ்ச்சியோடு சாமி தரிசனம் செய்தனர் இக்குடும்பத்தினர்.
கல்வியில் சிறக்கக் காவடியைச் சுமக்கத் தொடங்கி, இன்று வாழ்வில் வெற்றிபெறத் தொடர்ந்து காவடி சுமப்பதாகக் கூறினார் ராணுவத்தில் பணியாற்றும் விஷ்ணுராம்.
இதற்கிடையே, தாத்தாவை மனத்தில் நிறுத்திக் காவடி சுமக்க வந்திருந்தார் உயர்நிலைப் பள்ளி மாணவர் சிவானந்தம் ஆதவன், 16. “எட்டு ஆண்டுகளாகத் தைப்பூச நாளில் காவடி செலுத்தினேன். கடந்த ஆண்டு காயமடைந்ததால் பால்குடம் எடுத்தேன். ஆனால் இம்முறை என் தாத்தாவை மனத்தில் நிறுத்தி நன்றியுணர்வுடன் காவடி சுமக்கிறேன்,” என்று கூறினார்.
ஆங்காங்கே அமைக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், பக்தர்களைப் பரவசப்படுத்துவதற்காக ஒலித்த இசைக் கருவிகள், தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டிய தொண்டூழியர்கள், குடும்பத்தினருக்காகத் தோள்கொடுத்த உறவுகள் எனத் தைப்பூசத் திருவிழா 2025 களைகட்டியது.
சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்த மூத்தோர் முதல் பெற்றோரின் கரங்களில் தவழ்ந்த கைக்குழந்தைகள் வரை திரளான பக்தர்கள் இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.