நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கிற்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கும் பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழக மத்தியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) தமது முதலாவது தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிய பிரதமர் வோங், சிங்கப்பூரை இன்றுள்ள நிலைக்கு உயர்த்திய அவ்விரு முன்னாள் பிரதமர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி கூறிக்கொண்டார்.
“கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் சாதித்துக்காட்டியது ஏராளம். நமது முன்னைய பிரதமர்களும் அரசாங்கமும் அடுத்தடுத்த தலைமுறையினரும் அமைத்த வலுவான அடித்தளங்களே அதற்குக் காரணம்,” என்று திரு வோங் சொன்னார்.
தான் அரசாங்கச் சேவையில் இணைந்தபோது திரு கோ பிரதமராக இருந்ததாக அவர் சொன்னார். அத்துடன், திரு கோ எம்.பி.யாக இருந்த மரின் பரேட் தொகுதியில்தான் தாம் குழந்தையாக இருந்து வளர்ந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“அவரால் அப்பேட்டை பெற்ற மேம்பாடுகளால் நானும் பெரிதும் பயனடைந்தேன்,” என்றார் பிரதமர் வோங்.
திரு லீ நிதியமைச்சராக இருந்தபோது, இளம் அதிகாரியாக அவருடன் தான் பணியாற்றிய அனுபவத்தையும் திரு வோங் பகிர்ந்துகொண்டார்.
“ஓர் இளம் அதிகாரியாக, சில வரவுசெலவுத் திட்டங்களில் நான் திரு லீக்கு ஆதரவாக இருந்துள்ளேன். பின்னர் அவர் பிரதமரானதும், முதன்மைத் தனிச்செயலாளரை அவர் தேடிக்கொண்டிருந்தார். அப்பதவிக்கான நேர்காணலுக்கு நான் முன்மொழியப்பட்டேன். எனக்கு அவ்வேலை கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆனாலும், அவருடன் பணிபுரியும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
“என்னால் முடிந்த அளவிற்கு அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள முயன்றேன்,” என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குமுன், அப்போதைய பிரதமரான திரு லீயின் முதன்மைத் தனிச் செயலாளராக இருந்தபோது, அவருடைய உரைகளைத் தயாரிக்க தான் உதவியதாகவும் திரு வோங் கூறினார்.
“அப்போது நாங்கள் மிகவும் இளையவர்கள், இப்போது மூத்த அமைச்சர் லீயின் தலைமுடி நரைத்து, வெள்ளையாகிவிட்டது. என் தலைமுடி எப்போது நரைக்கும் எனத் தெரியவில்லை. ஆனாலும், அதற்கு மனத்தளவில் தயாராகி வருகிறேன்,” என்று மாண்டரின் மொழியில் திரு வோங் பேசியபோது, மூத்த அமைச்சர் திரு லீயும் அதனைக் கேட்டுச் சிரித்தார்.
கடந்த 13 ஆண்டுகளில் பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றியபோது, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

