தர்மன்: இன்றைய சிங்கப்பூரர்கள் இனத்தை மட்டுமே பார்ப்பதில்லை

தர்மன்: இன்றைய சிங்கப்பூரர்கள் இனத்தை மட்டுமே பார்ப்பதில்லை

2 mins read
b27e629b-c4ec-4dae-80d2-e71172ee1f2e
பாசிர் பாஞ்சாங் மின்நிலையத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் திரு தர்மன் சண்முகரத்னமும் அவரின் துணைவியாரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீன இனத்தைச் சாராத ஒருவரைப் பிரதமராக ஏற்க சிங்கப்பூர் எந்த நேரத்திலும் தயாராக உள்ளது என்று அதிபர் தேர்தல் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் அரசியலில் இனத்தையும் பார்க்கும் போக்குள்ளது என்ற திரு தர்மன், அதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவைக் குறிப்பிட்டார்.

நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும், இன்றைய சிங்கப்பூரர்கள் இனம் மட்டுமின்றி, எல்லாவற்றையும் பார்ப்பதாக அவர் சொன்னார்.

ஒரு சமுதாயமாக சிங்கப்பூர் வளர்ந்துள்ளதற்கு இதுவே சான்று என்றார் 66 வயதான திரு தர்மன்.

“அவர்கள் ஒருவரை முழுவதுமாக ஆராய்கின்றனர். பிரதமராவதற்கு உயர்ந்த தகுதியுடன் ஒருவர் வந்தால், அவரை பிரதமராக்க முடியும். சீனர் அல்லாத ஒருவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள சிங்கப்பூரர்கள் தயாராக இருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன்,” என்று முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன் கூறினார்.

இந்தக் கேள்விக்கு விடை உங்கள் கண்முன்னே உள்ளது என்ற திரு தர்மனின் துணைவியார் ஜேன் இட்டோகி, 69, “சீனர் அல்லாத ஒருவரைத் தங்கள் அதிபராகத் தேர்ந்தெடுக்க சிங்கப்பூரர்கள் வாக்களிக்க இருப்பதே சான்று,” என்று சுட்டினார்.

திரு தர்மன் வெள்ளிக்கிழமை மாலை பாசிர் பாஞ்சாங் மின்நிலையத்தில் ஒரு தேர்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். பொதுமக்களில் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்ட 650 பேர் அதில் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வில் 20 நிமிடம் உரையாற்றிய திரு தர்மன், பின்னர் ஒரு மணி நேரம் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அரசாங்கக் கொள்கைகள் முக்கியம் என்றாலும் அவற்றின் மூலம் மட்டுமே பாகுபாடற்ற, சிறந்த இடமாக சிங்கப்பூர் விளங்க முடியாது என்று திரு தர்மன் சொன்னார்.

மாறாக, அளவிட முடியாத பல விஷயங்களில் கவனம் செலுத்துவதில்தான் சிங்கப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

கண்ணுக்குப் புலப்படாத, அர்த்தமுள்ள பல வேலைகளைச் செய்யும் பலர் இங்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தேர்ச்சியும் ஒவ்வொரு வேலையும் மதிக்கப்பட வேண்டும் என்று திரு தர்மன் கேட்டுக்கொண்டார்.

தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கும்படி பல அனைத்துலக நிறுவனங்களில் தமக்கு அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்ட திரு தர்மன், ஆனாலும் சிங்கப்பூரைவிட்டுச் செல்ல தமக்கு விருப்பமில்லை என்றார். தாய்நாட்டிற்குச் சேவையாற்றுவதைவிட வாழ்வில் மிகச் சிறந்த வேறு நோக்கமிருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்