அதிபர் தேர்தலை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகவும் அதிபர் பதவியைக் கருத்தில்கொண்டு அது கண்ணியமான போட்டியாக இருக்குமென நம்புவதாகவும் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார்.
“வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூருக்கு மதிப்புமிக்க ஒன்றைக் கொண்டுவருவதால் அவர்கள் அனைவரும் நேர்மறையுடன் தங்களை முன்னிறுத்தி, தேர்தலை அணுக ஊக்குவிக்கிறேன்,” என்று 66 வயதான திரு தர்மன் கூறினார்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் பெருமூளைவாதக் கூட்டணியின் அறப்பணி இரவு விருந்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17ஆம் தேதி வியாழக்கிழமையே இறுதிநாள். அதற்கு மறுநாளே அதிபர் தேர்தல் குழு, திரு தர்மன் உள்ளிட்ட மூவருக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கிவிட்டது.
திரு தர்மனுடன் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சோங், 75, என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியன், 75, ஆகியோருக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட தொழில்முனைவர் ஜார்ஜ் கோ, 63, தகுதிபெறவில்லை.
19(3)(ஏ) சட்டப்பிரிவின்கீழ், மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அமைச்சராகப் பணியாற்றியுள்ளதால் திரு தர்மனின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிபர் தேர்தல் குழு தெரிவித்தது.
திரு தர்மனின் நேர்மை, நற்பண்பு, நன்மதிப்பு ஆகியவை தொடர்பில் அக்குழு மனநிறைவுகொள்வதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, தகுதிபெற்றவர்கள் பட்டியலில் திரு ஜார்ஜ் கோ இடம்பெறாததற்குத் தாம் மிகுந்த வருத்தமடைவதாகத் திரு தர்மன் சொன்னார்.
“பல ஆண்டுகளுக்குமுன் அவர் தாம் தொடங்கிய முழுமையான பயணத்தில் கடினமாக உழைத்துள்ளார். அதனால், பட்டியலில் அவர் இடம்பெறாததால் வருத்தமடைகிறேன். அவர்மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு. ஆயினும், ஏதேனும் ஒரு வழியில் பொது வாழ்வில் அவர் தொடர்வார் என்றும் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து பங்களிப்பார் என்றும் நம்புகிறேன்,” என்று திரு தர்மன் கூறினார்.
தேர்தலில் வெற்றிவாய்ப்பு குறித்துக் கேட்டதற்கு, யார் போட்டியிடுகிறார்கள் என்பது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் தான் கணக்கிடவில்லை என்று பதிலுரைத்தார்.
“என்னுடைய கடந்தகாலச் செயல்பாடு, என் வாழ்க்கையின் நோக்கம், சிங்கப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சியில் என்னால் எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பனவற்றின் அடிப்படையில் நான் போட்டியிடுகிறேன்.
“நிலைமை மாறி வருகிறது என்று நான் நினைப்பதால் மட்டுமே அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். சிங்கப்பூரின் அடுத்த வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், அதிபர் பதவிக்கு ஒரு வேறுபட்ட பண்பு தேவைப்படுகிறது.
“அதுவே நான் போட்டியிடக் காரணமே தவிர, எனக்காக நான் போட்டியிடவில்லை,” என்று திரு தர்மன் விளக்கமாகக் கூறினார்.

