சைனாடவுனில் மீண்டும் திரையரங்கு

சைனாடவுனில் மீண்டும் திரையரங்கு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2026 - 11:30 am

2 mins read

சைனாடவுனில் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கு ஒன்று வரவுள்ளது. அது முந்தைய ஓரியன்டல் தியேட்டர் இருந்த இடத்தில் அமையும்.

அதே வேளையில், சைனாடவுன் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள லக்கி சைனாடவுன் கடைத்தொகுதி ஹோட்டலாக மாறக்கூடும்.

ஓரியன்டல் பிளாசாவில் உள்ள புதிய திரையரங்கின் புதுப்பிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

ஓரியன்டல் பிளாசா, ஷா ஓரியன்டல் என்ற பெயரில் மீண்டும் திறக்கப்படும் என்று சிபிஆர்இ சொத்து நிறுவனம் தெரிவித்தது.

ஷா குழுமத்திற்குச் சொந்தமான ஓரியன்டல் பிளாசா, ஃபார் ஈஸ்ட் குழுமத்திற்குச் சொந்தமான லக்கி சைனாடவுன் ஆகியவை 1990களின் தொடக்கத்தில் கட்டப்பட்டன. அவை தனிச்சொத்துரிமை பெற்ற நிலப்பகுதிகளில் உள்ளன.

திரையரங்கின் புதுப்பிப்புப் பணிகள், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் சைனாடவுனில் உள்ள ஒரே ஒரு திரையரங்கமாக அது விளங்கும்.

திரையரங்கு உள்ள கட்டடம் நான்கு தளங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் உணவு, சில்லறை வர்த்தகம், கேளிக்கை இடங்கள், அடித்தள வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெறும்.

சைனாடவுன் ஒரு காலத்தில் மாண்டரின், கிளைமொழித் திரைப்படங்களுக்கான நடுவமாகத் திகழ்ந்தது.

2016ஆம் ஆண்டில் பெர்ள்ஸ் சென்டரில் இருந்த யாங்சி திரையரங்கு மூடப்பட்டதிலிருந்து அங்குத் திரையரங்கு ஏதும் இல்லை. தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்காக அக்கட்டடம் இடிக்கப்பட்டது.

திரையரங்கு மீண்டும் திறக்கப்படுவது குடியிருப்பாளர்களுக்கு நல்லது என 40 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் வோங் ஹான் மின் கூறினார். ஆயினும், அது மற்ற ரசிகர்களையும் ஈர்க்க வேண்டும் என்றார் அவர்.

1950, 1960களில் சைனாடவுன் திரையரங்குகள் உச்சத்தில் இருந்தன. அக்காலத்தில் ஓரியன்டல், மெஜஸ்டிக், மெட்ரோபோல் ஆகிய மூன்று திரையரங்குகள் பெருங்கூட்டத்தை ஈர்த்தன.

குறிப்புச் சொற்கள்