சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரின் பெட்டியைத் திருடிய ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
துபாயிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. திருடியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சீனாவைச் சேர்ந்த 26 வயது ஆடவரான லியூ மிங் ஒப்புக்கொண்டார்.
அவரின் இச்செயலுக்குக் குற்றக் கும்பல் ஒன்று நிதி தந்திருக்கிறது. விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் பகுதியில் இருக்கும் பயணிகளிடமிருந்து அதிக மதிப்புள்ள பொருள்களைத் திருடுவதற்காகவே லியூ விமானத்தில் ஏறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் திருடிய குற்றங்கள் சில இவ்வாண்டு நிரூபிக்கப்பட்டன. அந்த வரிசையில் லியூவின் வழக்கும் இடம்பெற்றுள்ளதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி மாலை துபாயிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட எஸ்கியூ495 விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் பகுதியில் லியூ அமர்ந்திருந்தார். அவரின் செயலால் பாதிக்கப்பட்டவர் அசர்பைஜானைச் சேர்ந்த 52 வயது ஆடவர் ஒருவர்.
அந்நபர் லியூவுக்கு ஐந்து வரிசைகள் முன்னால் அமர்ந்திருந்தார். அவரின் மனைவி, லியூவுக்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தார்.
ஆகஸ்ட் எட்டாம் தேதி காலை லியூ குற்றத்தைப் புரிந்தார். உணவு வழங்கப்பட்டு விமானத்தின் விளக்குகள் மங்கலாக்கப்பட்ட பிறகு அவர் திருடியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட நபர் உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் மனைவி அப்போதுதான் சிறிது நேரம் உறங்கிய பிறகு விழித்துக்கொண்டார். விமான ஊழியர்கள் திரை போட்டபடி அவர்களின் கூடத்தில் இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
லியூ, அஸ்ர்பைஜான் ஆடவரின் பையைத் தனது இருக்கைக்கு எடுத்துச் சென்றார்.
லியூ தனது கணவரின் பையை நகர்த்துவதைப் பார்த்த மனைவி அவரிடம் கேள்வி கேட்டார். லியூவின் பதில் புரியாததால் மனைவி விமான ஊழியர்களிடம் தெரியப்படுத்தினார்.
அப்போது திறக்கப்படாத அந்தப் பையை பாதிக்கப்பட்ட ஆடவரின் இருக்கைக்கு மேல் உள்ள பெட்டிக் கூடத்தில் வைத்துவிட்டு லியூ தனது இருக்கைக்குக் திரும்பினார். தனது பை என்று தவறாக நினைத்ததால் அவ்வாறு செய்ததாக லியூ பொய் சொன்னார்.
பாதிக்கப்பட்ட நபரின் பையில் இருந்த பொருள்களின் மொத்த மதிப்பு 100,000 வெள்ளிக்கு மேலாகும். பையில் எந்தப் பொருளும் காணாமற்போகவில்லை.
இச்சம்பவம் குறித்து விமான ஊழியர்கள், சாங்கி விமான நிலையத்திடம் தெரியப்படுத்தினர். காவல்துறையிடமும் புகாரளிக்கப்பட்டது.

