சாங்கி விமான நிலையத்தில் திருட்டு; 51 வயது மாது கைது

1 mins read
aa4cf84b-4c65-4b3e-afdc-611dd1750966
சாங்கி விமான நிலைய முனையம் 1ல் உள்ள கார்டியன் மருந்துக் கடையில் ஊட்டச்சத்து மருந்துகள் கொண்ட ஒரு பெட்டி காணாமல்போனது தெரியவந்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சாங்கி விமான நிலைய முனையம் 1ல் $503.30 மதிப்புள்ள ஒரு ஊட்டச் சத்து மருந்துப்பெட்டி ‘கார்டியன்’ கடையின் காட்சிப் பெட்டகத்திலிருந்து கடந்த மே மாதம் 7ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் காணாமல்போனது.

சம்பவம் கண்டறியப்பட்டு காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 51 வயது ஆஸ்திரேலிய மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தது.

முனையம் 1ல் உள்ள விமானப் புறப்பாடு, பயண இடைமாற்றப் பகுதியில் பயணிகள் காத்திருக்கும் ‘டிரான்சிட்’ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

‘சிசிடிவி’ (CCTV) கண்காணிப்பு புகைப்படக் கருவியில் பதிவான காட்சிகளின் உதவியுடன் ஏப்ரல் 14ஆம் தேதியன்று அந்த மாது கடையைவிட்டு அந்தப் பொருளுக்குக் கட்டணம் செலுத்தாமல் செல்வதைக் காவல்துறை கண்டறிந்தது. அன்றே அந்த மாது சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டார்.

நவம்பர் 2ஆம் தேதி அந்த மாது சிங்கப்பூர் திரும்பி சாங்கி விமான நிலையத்தில் பயண இடைமாற்றம் செய்ய முயன்றபோது கைதுசெய்யப்பட்டார்.

அந்த மாதின் குற்றம் தொடர்பில் அவர்மீது புதன்கிழமை (நவம்பர்12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரு தண்டனைகளும் ஒருசேர விதிக்கப்படலாம்.

இவ்வாண்டின் முதற்பாதியில் 2,097 திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது கடந்த 2024ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த 2,013 குற்றங்களை விட அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்