சாங்கி விமான நிலையத்தில் திருட்டு; ஆடவருக்குச் சிறை

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு; ஆடவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 6:01 pm

1 mins read

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் மூன்று வாசனைத் திரவியங்களைத் திருடிய ஆடவருக்கு 21 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கக் குடிமகனான 48 வயது காய் கிளிஃபர்ட் ஹிரோஷி, சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் போது திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அவர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையும்போது கைது செய்யப்பட்டார்.

கிளிஃபர்ட் திருட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காகச் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3க்கு வந்தபோது கிளிஃபர்ட் குற்றங்களைப் புரிந்தார்.

மாலை 7.40 மணியளவில் ‘ஷில்லா’ அழகுசாதனப் பொருள்கள் கடைக்குச் சென்ற அவர், காட்சிப்பேழையிலிருந்த $331 மதிப்புள்ள வாசனைத் திரவியத்தைத் திருடிவிட்டு விரைவாக வெளியேறினார்.

ஒரு மணி நேரத்திற்குள் வேறொரு ‘ஷில்லா’ கடைக்குச் சென்ற அவர், மேலும் இரண்டுவாசனைத் திரவியங்களைத் திருடினார். அவற்றின் மொத்த மதிப்பு $453.

இத்திருட்டுகளை ஊழியர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்காததால், கிளிஃபர்ட் விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.

மறுநாள் பொருள்கள் காணாமல் போனதை உணர்ந்த ஊழியர்கள், கண்காணிப்புக் படக்கருவியைச் சரிபார்த்தனர். அதில் கிளிஃபர்ட் திருடுவது பதிவாகியிருந்ததையடுத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

பிறகு, 2026 செப்டம்பர் 25ஆம் தேதி விமான நிலையத்திற்கு வந்தபோது கிளிஃபர்ட் கைது செய்யப்பட்டார்.

திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்படவில்லை என்றாலும், அதற்கான முழுத் தொகையையும் அவர் செலுத்திவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்