கொள்கை வகுப்பதில் நிறைவான தீர்வுகள் இல்லை: டான் கியட் ஹாவ்

11வது சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றத் திட்டம்

கொள்கை வகுப்பதில் நிறைவான தீர்வுகள் இல்லை: டான் கியட் ஹாவ்

படம்: ரீச்

25 Oct 2026 - 8:15 pm

3 mins read

கொள்கை வகுப்பது என்பது அடிப்படையில் மிகவும் சிக்கலானது. குறைகள் நிறைந்த சூழலிலும் தவிர்க்க முடியாத சமரசங்களுக்கு இடையிலும் முடிவுகளை எடுப்பதே அதன் சாராம்சம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறியுள்ளார்.

11வது சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றத் திட்டத்தின் (எஸ்எம்பி 2026) நிறைவு விழா சனிக்கிழமை (அக்டோபர் 24) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ‘ரீச்’ அமைப்பின் தலைவருமான திரு டான், அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதில் உள்ள யதார்த்தங்களைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்தார்.

“கொள்கை வகுப்பது எளிமையானதாக இருப்பது அரிதே. நிறைவான தீர்வுகளும் மிகவும் அரிது,” என்று குறிப்பிட்ட அவர், குறைகள் நிறைந்த உலகிலும் அரைகுறையான தகவல்களுக்கு மத்தியிலும் முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதைச் சுட்டினார்.

அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நிலையில், பூரணமான தீர்வுகள் இல்லாததால் தவிர்க்க முடியாத சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரங்கில் உங்களுக்கான இடத்தைப் பிடிப்பது என்பது வெறுமனே ஒரு நாற்காலியில் அமர்வதற்கு அப்பாற்பட்டது என்ற செய்தியை முன்வைத்து, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வந்திருந்த மாணவர்களை வரவேற்று திரு டான் பேசினார்.

தங்கள் கருத்துகளைத் துணிவுடன் முன்வைப்பதுடன், பிறரின் கருத்துகளையும் திறந்த மனத்துடன் செவிமடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வெவ்வேறு கோணங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, தேவையான சமரசங்களைக் கணக்கில் கொள்வதுடன், அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதையும் உணர வேண்டும் என்றார்.

“உங்கள் குரலை ஒரு வாதத்தை முன்வைப்பதற்காகவோ, உங்கள் கருத்துகளை நிரூபிப்பதற்காகவோ மட்டும் பயன்படுத்தாதீர்கள். உரையாடலை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல அதைப் பயன்படுத்துங்கள்,” என்று மாணவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

நல்ல கொள்கைகளை வகுப்பதற்குத் தீவிரமான விவாதங்களைக் காட்டிலும் அனுதாப உணர்வும் மன அடக்கமும் அவசியம் என்றும் திரு டான் குறிப்பிட்டார்.

ஒருவர் தாம் நம்பும் கொள்கைகளுக்காக வாதிடுவது முக்கியம் என்றாலும், அதே நேரத்தில் தமது அணுகுமுறையில் விடுபட்டவை எவை, வேறு யார் பாதிக்கப்படக்கூடும், மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின்கீழ் இயங்கும் ‘ரீச்’ அமைப்பு ஏற்பாடு செய்த இத்திட்டம் அக்டோபர் 17, 18, 24ஆம் தேதிகளில் நடைபெற்றது.

தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய சேவையாளர்கள், பல்கலைக்கழகச் சேர்க்கைக்காகக் காத்திருப்போர் என 29 கல்விக் கழகங்களைச் சேர்ந்த 128 இளையர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட இளையர்களைச் சென்றடைந்துள்ளது.

பங்கேற்பாளர்கள் நாடாளுமன்ற நடைமுறைகள், பொதுக் கொள்கைத் தொடர்புகள், உரை தயாரித்தல் ஆகியவை குறித்த பயிலரங்குகளில் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் எதிர்காலக் கொள்கைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதில் ஆராயப்பட்டது.

நிறைவு நாளில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்ற விவாதத்தில் இரு முக்கியத் தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.

முதலாவதாக, மாறிவரும் உலக ஒழுங்குமுறையில் சிங்கப்பூரின் பொருளாதாரப் போட்டித்தன்மையை வலுப்படுத்துதல், ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், பொய்த்தகவல்கள் காலத்தில் இறையாண்மையைப் பாதுகாத்தல் ஆகியவை ஆராயப்பட்டன.

இரண்டாவதாக, சமூக நகர்வை வலுப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குதல், வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இடையிலான சமநிலை ஆகிய தேசியச் சவால்கள் குறித்து இளையர்கள் தீவிரமாக விவாதித்துத் தங்களது கொள்கைப் பரிந்துரைகளை முன்வைத்தனர்.

இந்த மாதிரி நாடாளுமன்ற அனுபவம் இளையர்களின் சமூகப் பங்களிப்பின் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று திரு டான் விருப்பம் தெரிவித்தார்.

மக்கள் சமூக முயற்சிகளிலும் அமைப்புகளிலும் இணைந்து தங்களது எண்ணங்களைச் செயல்பாடுகளாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், வெற்றிபெற்ற குழுக்களுக்குச் சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.

குறிப்புச் சொற்கள்