தங்கள் வாகனத்தை டாக்சி போல் காட்சியளிக்கச் செய்வோர் பிடிபட்டால் சிறைத் தண்டனைக்கு ஆளாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறை குற்றவாளிகளுக்கு மூன்று மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள சிவப்பு நிற டாக்சியைப் போல் மாற்றியமைக்கப்பட்ட கார் ஒன்றின் படங்கள் சென்ற மாதம் சமூக ஊடகங்களில் காணப்பட்டன. அதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆணையம் பதிலளித்தது.
சம்பந்தப்பட்ட கார், 1982ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘டொயோட்டா கொரோலா 1.3’ வகை காராகும். அது, ஹாங்காங்கில் டாக்சிகளாகப் பயன்படுத்தப்படும் அதே வகை கார்.
சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு காரை டாக்சி போல் தென்படச் செய்யும் அம்சங்களை அகற்றியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
காரின் கண்ணாடியைத் துடைக்கும் கருவியின்கீழ் ஆணையம் கட்டுப்பாட்டு எச்சரிக்கை ஆவணத்தை விட்டுச் சென்றதை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி மாலை வேளையில் அதன் உரிமையாளரான 29 வயது ஜேக் யோங் அறிந்தார்.

